கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கச்சதீவு நிலப்பரப்பில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக இலங்கை கடற்படை புனித அந்தோனியார் தேவாலயத்தையும் பாதுகாத்து வருகின்றனர்.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா வைத் தவிர, இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு கடற்படையினரால் பராமரிக்கப்படுகிறது.
இந்த கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர் சிலை கடற்படை இணைப்பின் கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் இந்த தேவாலயத்தை தவிர இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. இதேவேளை, கடமைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ இல்லங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர இந்த கச்சதீவில் வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.