சம்பளமில்லாத விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு

85 0

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இவ்வாரம் இடம்பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்த 7000 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ளதால் இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,அத்துடன் அரச நிர்வாக கட்டமைப்பிலும் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடியாது.

ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை சேவையில் இணைர்துக் கொள்ளாமல் ,அவர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது, நிபந்தனைகளின் அடிப்படையில் சத்தியகடதாசி ஊடாக அவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள்,மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இவ்வாரம் இடம்பெறும்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும். விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களின் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு எடுக்காவிட்டால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்றார்.