திறைசேரி செயலாளருக்கு எதிராக சிறப்புரிமை மீறல் முறைப்பாடு செய்துள்ளோம்

81 0

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார். வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமல் இருப்பதால் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என திறைசேரியின் செயலாளர் தொடர்பில் சபாநாயகரிம் சிறப்புரிமை மீறல் முறைப்பாடு செய்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் டொலர் முதல் தவணை நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இருமுறை பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் எப்போது இடம்பெறும் என குறிப்பிடவும் முடியாது.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைளில்  தலையிட போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான 9 பில்லியன் ரூபாவை அரசாங்கம் தாராளமாக விடுவிக்கலாம்.

340 உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவுப் பெற்றுள்ளது. சபைகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவி காலத்தை அரசியலமைப்பின் பிரகாரம் எவ்வழிகளிலும் நீடிக்க முடியாது,அதற்கு இடமளில்லை.

ஏற்கெனவே ஒருவருட காலம் தாமதப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து மக்கள் பிரநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சிமனற்ங்களின் நிர்வாகத்தை முன்னெடுக்க பாராளுமன்ற உறுப்பினர் வஜித அபேவர்தன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினால் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை திறைசேரியின் செயலாளர் விடுவிக்காமல் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுகிறார், ஆகவே திறைசேரியின் செயலாளரினால் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்hனவினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதுஎன சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியை அந்த பணிக்கு பயன்படுத்த விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையத்தரவால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்படவில்லை.

திறைசேரியின் செயலாளரினால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை ஆளும் தரப்பினர் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.