இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்!

100 0

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கூ இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட “Aukus” உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற நேர்காணலில் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின் எதிர்காலப் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும், இந்து-பசிபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு சமுத்திரங்களைக் கொண்டிருப்பதாகவும், இந்து சமுத்திரத்தில் கப்பல்கள் சுதந்திரமாக பயணித்தல் மற்றும் கடலுக்கடியில் கேபிள்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கு எமது நாடு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதனால் ஆசிய பசுபிக் வலயத்தில் குறிப்பாக தாய்வான் பிரச்சினை இந்து சமுத்திரதிற்குள் கசியாமல் பார்த்துக் கொள்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகின்ற 2048 ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும் எனவும் அவை அனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாம் பலமான ஜனநாயக கட்டமைப்பினையும் திறந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சிறியதொரு நாடு என்ற வகையில் அரசியல் ஸ்திரத் தன்மையை பேணி வருகின்ற அதேநேரம் எமது அயல்நாடும் நீண்ட கால உறவை பேணிவரும் நாடுமான இந்தியாவை வலயத்தின் பாதுகாவலனாக கருதுகிறோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான பொருளாதார கொள்கைகளுடன் புத்துயிர் பெற்றுவருகின்ற ஆசிய வலயம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளோடு கைகோர்த்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை முன்நின்று செயற்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவுடன் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமாக மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது என்றும் ஆசியாவின் மீக நீண்ட பொருளாதார கூட்டிணைவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை கைசாத்திடுவதால் உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது, அடுத்த 25 வருடங்களுக்குள் செழிப்பான மற்றும் வலுவான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி விரிவான கருத்துக்களை தெரிவித்தோடு, இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்து மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்கள் இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆய்வாளர்களாகிய உங்களுடன் உரையாடலில் பங்கேற்பதற்கு என்னை அழைத்ததற்காக பேராசிரியர் தருண் கன்னா மற்றும் பேராசிரியர் அஸீம் கவ்ஜா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

லக்ஷ்மி மிட்டல் மற்றும் பெமில் சவுத்ஏசியா நிறுவனம், சர்வதேச அபிவிருத்திக்கான உங்களின் நிலையத்தின் ஆதரவுடன் தெற்காசியா தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

நான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, நாடு மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது. நீங்கள் கூறியது போல், 25% மக்கள் தொகையில் வறுமை இருமடங்காக உயர்ந்துள்ளது, மேலும் சுமார் 500,000 பேர் வேலை இழந்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு வருமானம் 2018 இல் 12.5 இல் இருந்து 2022 இல் 8.2 ஆக குறைந்துள்ளது.

கடன் சேவை, சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை.

அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% ஆக அதிகரித்துள்ளது. இலங்கை இப்படி பொருளாதார அழிவின் படுகுழியை நோக்கி நகர்ந்த போது நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டது. ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேறவும் பதவியிலிருந்து விலகவும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம், பிரதமர் அலுவலகம், இவையனைத்தும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எனது தனிப்பட்ட வீடு மற்றும் நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து எம்.பி.க்களை வெளியேற்றும் முயற்சி சரியான நேரத்தில் இராணுவம் வந்ததால் தடுக்கப்பட்டது.

நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, நமது வெளிநாட்டு கையிருப்பு குறைந்திருந்தது. திறைசேரியில் பணம் இருக்கவில்லை. தினமும் காலையில் நான் அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து மேலதிகமாக ரூ. 100 மில்லியன் – ரூ. 200 மில்லியன் தேடிக்கொள்ளும் வழிவகையை ஆராய்வேன். எம்மிடம் அந்நிய கையிருப்பு இல்லாத நாட்களும் இருக்கின்றன. எனவே IMF உடன் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவது எனது முதல் பணியாக இருந்தது. அதற்கு விலை சீராக்கல் தேவைப்பட்டது. இது கடினமான பணியாக இருந்தாலும் மாற்றுவழியிருக்கவில்லை.

பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்தது. இது 2023 முதல் 2026 வரையிலான நிதி ஒருங்கிணைப்புக்கான நான்கு ஆண்டு திட்டமாகும் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் அந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைப் பொருளாதாரத்தின் இரட்டை ஏற்றத்தாழ்வுகள், நிதிப் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு சமநிலைப் பற்றாக்குறை என்பவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.

பொருளாதார நிலைத்தன்மையை அடைதல், கடன் மறுசீரமைப்பை மீளமைத்தல், பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட ஒரு திட்டத்திற்கு நாங்கள் உடன்பட்டோம்.

இந்தத் திட்டத்தின் ஊடாக 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக அதிகரிப்பது, கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்படும். இதன் ஊடாக கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கு தேவையான நிதி வளங்கள், அத்துடன் சமூக பாதுகாப்பு வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் விலை ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல். இந்த வசதி மூலம் நாம் பெற்ற 3 பில்லியன் டொலர்களை விட IMF உதவியின் மதிப்பு மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கையானது, அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் பொதுவாக உலகளாவிய சந்தையிலிருந்து நிதி ஆதாரங்களை அணுக உதவுகிறது. இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான நிதியுதவி அவசியமானது.

நமது வரவுசெலவுத் திட்டத்தின் வெளி நிதியுதவியை மீளமைப்பதன் மூலம், மத்திய வங்கியின் நிதியளிப்பு தேவை குறையும். சர்வதேச நாணய நிதிய வசதிகளைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளுடன், இலங்கை தனது கடனை மறுசீரமைக்கும் முயற்சியையும் தொடங்கியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செய்யும் முறை குறித்து கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மேலும் கடன் மறுசீரமைப்பின் போது இலங்கை தனது நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியை வலுவாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதன் பிறகு, 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும், இது மட்டும் போதுமானதல்ல. வேகமாக மாறிவரும் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாததன் காரணமாக கடந்த சில தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தவறிவிடப்பட்டுள்ளது.

அப்படியானால், இந்த பயிற்சி மிகவும் முக்கியமானது. தற்போதைய கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களின் போட்டித்தன்மையை அதிகரித்தல், வர்த்தக தாராளமயமாக்கலை ஊக்குவித்தல், தனியார் முதலீட்டிற்கான தடைகளை நீக்குதல், இலங்கையின் வளர்ச்சி மூலங்களை திறந்துவிடல், காலநிலை மாற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையை உயர் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரும் என நம்புகிறோம்.

இந்த சீர்திருத்தங்களின் வெற்றியும் நிலைத்தன்மையும் நாட்டின் பிரதான இனக்குழுக்களிடையே நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பிலே தங்கியுள்ளது. அந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் புதிய அரசியல் கட்டமைப்பானது அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து இலங்கையைக் கட்டியெழுப்ப வழி வகுக்கும் என்பது எனது நம்பிக்கை.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது. தேசிய நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான் தற்போது அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினை, தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் அவர்களை விடுவித்தல், அரசியலமைப்பின் கீழ் தேசிய காணி ஆணைக்குழுவை அமுல்படுத்துதல், வடக்கு கிழக்கு காணிகளை உரிமையாளர்களுக்கு மீள வழங்குதல், அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு, மனித உரிமை மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை நிறைவேற்றுதல். அதற்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திட்டங்களில் முன்னெடுப்புகள் சிலவே இவை என்பதை சுட்டிக்காட்டலாம்.

மேலும், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்துடன் உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டம் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய தமிழ் குழுக்களுடனும் கலந்துரையாடி வருகின்றேன். புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொடர்புபடுவதற்காக தனியான புலம்பெயர் அலுவலகத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம் சட்டம்,பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான சட்டம் மற்றும் தேசிய பெண்கள் ஆணைக்குழு சட்டம் என்பவற்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான மாநாட்டிற்கான தனது நீண்ட கால உறுதிப்பாட்டை இலங்கை இதுவரை உறுதிசெய்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்களை அதிகாரமளித்தல் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் பெண்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதை நினைவு கூற விரும்புகிறேன்.

மேலும், இந்நாட்டு இளைஞர்களுக்கான உண்மையான, முறைமை மாற்றத்தை இளைஞர் யுவதிகள் கோருகின்றனர். பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்.

இதற்கிடையில், குறுகிய கால கடன் மறுசீரமைப்பு மூலோபாயம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் கவனம் செலுத்துகையில் , பொருளாதார மாற்றம் , 21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உள்ள சிக்கலான மற்றும் பல பரிமாணங்களின் தேவைகள், பாரிய டிஜிட்டல் மயமாக்கல், மேம்பட்ட தொழில்நுட்பம், தன்னியக்கம் செயற்கை நுண்ணறிவு ,காலநிலை மாற்றம் மற்றும் காடுகளின் தேவை என்பவற்றுக்கு முகங்கொடுப்பதற்கான சந்தர்ப்பம் குறித்தும் கவனம் கொள்ள வேண்டும்.

இதற்கு, பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பின்நவீனத்துவ சூழ்நிலையின் உறுதியற்ற தன்மையை குறித்த தெளிவு , அதிக போட்டித்தன்மையுள்ள ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீலப் பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மாதிரி அவசியமாகிறது.

ஹார்வடைச் சேர்ந்த பேராசிரியர் ரிக்கார்டோ ஹௌஸ்மன், இலங்கைப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மை குறித்து ஏற்கனவே செயற்பட்டு வருகிறார்.அவர் மேலதிக பணிகளுக்காக மிக விரைவில் இலங்கைக்கு வருவார் என நம்புகிறேன்.

அடுத்த 25 ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரத்தை நடுத்தர மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தவும் எதிர்பார்க்கிறோம். எமக்கு இதை செய்ய முடியும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 3 பில்லியன் டொலர் புதிய ஏற்றுமதி வருடாந்த வளர்ச்சியும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 3 பில்லியன் டொலர் வருடாந்த முதலீடும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சர்வதேச சந்தையை வெல்லும் திறன் கொண்ட போட்டித்தன்மையுள்ள தொழிலாளர் படையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப நமது தொழிற்பயிற்சி மற்றும் பல்கலைக்கழக கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் . இலங்கையை ஒரு பிராந்திய விநியோக மையமாக மாற்ற வேண்டும். பாரம்பரிய சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி, சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் புதிய சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பசுமை ஹைட்ரஜனுக்கான இலங்கைக்கு உள்ள திறன்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து, தன்னியக்க செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை மேம்படுத்தி அதில் உபரியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதை இரண்டு ஆண்டுகளில் செய்ய முடியாது, இது பத்து வருட வேலைத்திட்டமாக இருக்கும்.

நான் இதற்கு முன்னர் குறிப்பிட்ட காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றும் 25 வருட வேலைத்திட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது முடியாத விடயமல்ல.

1977 இல் இருந்து பத்து வருடங்களில் பாரிய நில அபிவிருத்தி மற்றும் நீர்த்தேக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் இது முதலில் முப்பது வருட வேலைத்திட்டமாக திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் பல சுதந்திர வர்த்தக வலயங்களை ஆரம்பித்தோம். ஏற்றுமதிக்காக ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இவை அனைத்தும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளன. பிராந்தியத்தில் நமது மூலோபாய நிலையை நாம் பயன்படுத்த வேண்டும்.

தெற்காசியாவில் பொருளாதார ஒருங்கிணைப்பு இன்மை, ஒரு சில மந்தமான முயற்சிகளைத் தவிர, பிராந்தியத்தின் பொருளாதாரங்களை ஒரு சக்திவாய்ந்த வர்த்தகக் கூட்டாக ஒருங்கிணைக்க உண்மையான அரசியல் விருப்பமின்மை என்ற இரண்டு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

அதை மேலும் சிக்கலாக்குவது எப்போதும் குறைந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் உறவாகும். இந்நிலைமையுடன் முன்னோக்கிச் செல்வதற்கு அயல் நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இலங்கைக்கு அவசியமாகும்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமாக மேம்படுத்த வேண்டும். இந்தியா அடுத்த மையமாக இருப்பதோடு, அது தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட காரணமாகும். 22 மைல்கள் தூரத்தைக்கொண்ட தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுவான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். இது உலகின் மிகப் பாரிய வர்த்தகக் குழுவுடன் முன்னோக்கிச் செல்ல எங்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, அதற்காக ஒரு விரிவான முற்போக்கான வர்த்தக உடன்படிக்கைக்குச் செல்லவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன் மூலம், இந்தியா, பிராந்திய விரிவான பொருளாதாரப் பங்காளித்துவம் (RCEP) மற்றும் டிராரான்ஸ்-பசுபிக் கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் (CPTPP) ஆகிய மூன்று பாரிய வர்த்தகக் குழுக்களுடன் இலங்கை இணைகிறது. இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் போட்டித் தன்மையானது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த உதவும்.

இந்தியப் பெருங்கடலில் எரிந்துகொண்டிருக்கும் பாரிய அதிகாரப் போட்டி நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது தந்திரமான தலைப்பு ஆகும். நாங்கள் எப்பொழுதும் நமது அரசியல் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதோடு, பிராந்தியத்தில் மொத்த பாதுகாப்பு வழங்குனராக இந்தியா கருதப்படுகிறது. இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் மிக நீண்ட உறவுகளை வைத்திருக்கும் நாடு இந்தியா ஆகும்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் குறிப்பாக தாய்வானில் நிலவும் பிரச்சினைகள் இந்தியப் பெருங்கடலில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.

நாம் ஒரு சிறிய நாடு. வலுவான ஜனநாயக பாரம்பரியத்தைக்கொண்ட, பிரிந்துவிடாத திறந்த பொருளாதாரத்தையுடைய, பழைய பொருளாதாரத்தின் சாம்பலில் இருந்து எழுந்து வருகின்ற ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சியுடன் கைகோர்த்து, புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு நமக்குள்ளது. இது கடினமான பணியாக இருக்கலாம், ஆனால் அது முடியாத காரியம் அல்ல.

பெரும் வல்லரசுகளின் போட்டிகள் அல்லது மோதல்கள் காரணமாக, இலங்கைக்கு திறக்கப்படும் இந்திய சந்தைப் பிரவேசம் அல்லது ஆபிரிக்க சந்தை திறக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியத்திற்கு இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட “Aukus” ஒப்பந்தம், சீனா மற்றும் குவாட் இடையே போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின் எதிர்கால நோக்கிற்கு இலங்கை உடன்படுவதோடு, இந்து – பசுபிக் பிராந்தியம் இரண்டு வெவ்வேறு பெருங்கடல்களைக் கொண்டது. இந்தியப் பெருங்கடலில் கடல் பயணத்திற்கான சுதந்திரம் மற்றும் கடலுக்கு கீழ் உள்ள கேபிள்களின் பாதுகாப்பிற்கு நமது நாடு அர்ப்பணித்துள்ளதால், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், குறிப்பாக தைவானில் உள்ள பிரச்சினைகள், இந்திய பெருங்கடலில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு அவசியம் ஆகும்.

இலங்கை அடுத்த 25 வருடங்களில் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வதன் மூலம் பாரிய அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என நான் நம்புகிறேன்.

ஹாவட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : ஜனாதிபதி அவர்களே, கடந்த ஆண்டு மொத்தத் தேசிய உற்பத்தி 9% இனால் குறைந்தது. இது மீண்டும் 6% இனால் குறையும் என்று பெரும்பாலான கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக பணவீக்கம் குறையவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையர்கள் உங்களிடம் பொறுப்பளிக்கப்படுவதை ஏன் நம்ப வேண்டும்?

பதில் : இந்த நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மேலும் தேவை என்று நான் தொடர்ந்தும் கூறி வந்தேன். 2020 ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுமாறு அப்போதைய ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டேன். 2021 இலும் உடனடியாக IMF க்கு செல்லுமாறு அறிவித்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

2002 இல், பொருளாதாரத்தில் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டபோது, நான் பிரதமராக பணியாற்றி, நேர்மறையான வளர்ச்சியுடன் கூடிய பொருளாதாரமாக மாற்றினேன். 2015 இல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தன. ஆனால் 2016 முதல் 2018 வரை முதன்மை வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்தது.

இந்தத் திட்டத்தைத் தொடர்ந்திருந்தால், இந்தப் பொருளாதாரப் பிரச்சினையை நாம் சந்திக்க நேரிட்டிருக்காது. எனவே இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே ஒருவன் என்று மக்கள் என்னை நம்பினார்கள். அடுத்ததாக, நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமை இருக்கிறது என்று நான் நினைத்தேன். அதனால்தான் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

நாட்டின் பொறுப்பை ஏற்க என்னை அழைப்பதற்கு முன், அப்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியினருக்கும் அதே அழைப்பை விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்தப் பணியை ஏற்க மறுத்தன. யாரும் முன்வராத போது நான் சவாலை ஏற்றுக்கொண்டு, பிரதிபலனைக் காட்டியதால் மக்கள் என்னுடன் இணைந்து செயற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி : IMF உடன் செயற்படும் நாடுகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் செயற்பட வேண்டி ஏற்படுகின்றது. உதாரணமாக, அரச நிறுவனங்களின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் அவற்றை எவ்வாறு கையாள்வீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

பதில் : அரச நிறுவனங்கள் பிரச்சினைதான். அவை செயற்திறனானவையாக இல்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் எங்களின் விமான சேவைகள் போன்ற சில நிறுவனங்களுக்கு மானியம் வழங்க நாங்கள் செலவழித்த தொகை, குறித்த காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகையை விட அதிகம் ஆகும்.

இனி அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்காது என்ற கொள்கைக்கு நாங்கள் சென்றுள்ளோம். அரசாங்கம் வணிக நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். தனியார் துறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கேள்வி : நீங்கள் கூறும் பாரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எவை? ஏழைகளின் பிரச்சினைகளுக்கு அவை எவ்வாறு தீர்வை வழங்கும்? தற்போது ஒரு சில பிரச்சினைகளை முன்வைப்பவர்கள் அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?

பதில் : இன்று குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகின்றது. சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மறுசீரமைக்கப்படுகிறது.

சமூக பாதுகாப்பு வலையமைப்பினால் பயனடைய வேண்டியவர்களில் 30-40% மக்கள் பயன்களைப் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தோம். அவர்கள் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் சேர்க்கப்படாவிட்டாலும், அவர்கள் பயனடைய வேண்டியவர்கள். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடப்படும் பணத்தில் இருந்து சரியான பிரதிபலன்கள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதாரம் மற்றும் கல்விக்காக நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகபட்ச பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விடயங்களில் தற்போது நாம் கவனம் செலுத்துகிறோம். நிதி சிக்கல்களை எதிர்நோக்கும் ஒரு சில சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது குறித்து வங்கிகளுடன் கலந்துரையாடி வருவதோடு, வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாம் எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான காலத்தில் அது எளிதான காரியம் அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு வேளை உணவைத் தவிர்க்கும் குடும்பங்கள் இன்று நாட்டில் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

டொலருக்கான மாற்று விகிதம் ஒரே இரவில் 185 இல் இருந்து 385 ஆக உயர்வடைந்ததால் நாம் அனைவரும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அந்த மக்களை பாதுகாப்போம் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.

கேள்வி : உள்நாட்டுப் போரின் போது பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பெரிய அளவிலான வன்முறைகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயங்கரவாதத் தடைச் சட்டம், குற்றச்சாட்டு அல்லது உரிய நடைமுறைகள் இன்றி மக்களைத் தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் பெரும்பாலும் போராட்டக்காரர்களை களங்கப்படுத்துகின்றன. போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை உங்களின் அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது?

பதில் : யுத்தம் நிறைவடைந்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் பேன் கீ மூனுக்கும் இடையில் ஒரு சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. மேலும் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உறுதியாக இருக்கிறேன். நான் ஏற்கனவே தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன்.

நான் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துக்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போது நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறேன். எனவே, அதனால் இவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனக்கு பொருந்தாது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே போராட்டக்காரர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சில போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போதுதான் பொலிஸார் தலையிட்டனர். அதன்பின்னர் எனது வீடும் எரிக்கப்பட்டது. எனது வீட்டில் இருந்த சுமார் 3000 புத்தகங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

அமைதியான போராட்டங்களை நான் நம்புகிறேன். பிரதமராக நான், குற்றவியல் அவதூறு ஒழிப்பு சட்ட மூலத்தைக்கொண்டு வந்தேன். தெற்காசியாவில் குற்றவியல் அவதூறு சட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் நான் கொண்டு வந்தேன்.

நான் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு மூன்று முறை அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டு வந்தேன். இப்போது நான் ஏன் இவற்றை நிறுத்துகிறேன்? நான் தான் உரிமைகளை வழங்கினேன்.

பாராளுமன்றம் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஒரு சகாப்தம் அன்று இருந்தது. அப்போதுதான் இராணுவம் தலையிட்டது. எனவே அப்போது அவர்களில் இருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அரச அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம் என அனைத்தையும் முற்றுகையிட்டு, பின்னர் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? ஆனால் நான் அதனை சரி செய்தேன். ஏனென்றால் ஜனநாயகம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம் போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சந்திக்கவுள்ளேன். எனக்கு மறைக்க ஏதாவது இருந்தால், நான் ஏன் சர்வதேச மன்னிப்பு சபையை சந்திக்கிறேன்?

கேள்வி : ஜனாதிபதி அவர்களே, அமைதியான போராட்டத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், உரிய நடைமுறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கும் நீங்கள் எடுக்கும் நிலையான நடவடிக்கைகள் என்ன?

பதில் : அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறினால், அங்கு பிரச்சினை ஏற்படும். அப்படியென்றால் அவர்கள் வந்து அரசாங்கத்துடனும் பொலிசாருடனும் மோதிக் கொண்டு அவர்கள் ஒருபோதும் அமைதியாக இருக்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அவ்வளவுதான் உங்களுக்கு சொல்ல முடியும். தடுப்புக் காவலில் இருந்த 3 பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புக்காவல் நீடிப்பிற்கான மூன்று மாத கால அவகாசம் முடிவதற்குள், நாட்டில் அமைதியான சூழல் நிலவியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நான் ஜனாதிபதியாக தடுப்புக்காவல் அதிகாரத்தை கண்டிப்பாக பயன்படுத்தமாட்டேன்.