தெற்கு அதிவேகப் பாதையை தனியார் மயப்படுத்த திட்டம்

261 0

தெற்கு அதிவேக வீதி உள்ளிட்ட அதி வேக வீதிகளை நிர்வகிப்பதற்காக தனியான நிதி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதனை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறியுள்ளார்.

இன்று அபயாராம விகாரையில் இடம்பெற்ற தேசிய வளங்களை பாதுகாப்போம் என்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கு இருக்கின்ற இலகுவான வழியான, பொருளாதாரத்திற்கு பாரிய பலமாக இருக்கும் இது போன்ற நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதில் ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதுவரை 34 அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய வளங்களை பாதுகாக்கும் நிலையத்தினால் கூறப்பட்டிருப்பதாகவும், 35 வது நிறுவனமாக தெற்கு அதுவேக வீதி தனியார் மயப்படுத்தப்படுவது தொடர்பில் அறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

தெற்கு அதிவேக வீதியில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வருமானம் 3 கோடி 80 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்றும், அவ்வாறான ஒரு நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் ரஞ்சித் சொய்சா கூறியுள்ளார்.