காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்!

124 0

சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல் போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி, அவர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி செல்வராணி,

வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது உறவுகளை கொடுத்து விட்டு அலைந்து திரிந்து தமது உறவுகளை தேடி வருகின்றனர்.

இறுதி யுத்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்த நிலையில் காணாமல் போனார்கள்.

இதே போன்று வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் போனார்கள்.

காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | About Missing Persons Should Be Stopped

தனது உறவுகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடிவரும் நிலையில் எங்கோயிருந்து வந்து அரசாங்கத்தின் அடிவருடி போல் இருந்து கொண்டு காணாமல் போனவர்கள் இல்லை, போரில் இறந்து விட்டனர். காணாமல் போனவர்கள் என்பது பொய் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வரும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலாவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று சர்வதேசமே இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் யாரோடும் எலும்புகளுக்கு வாலாட்டும் உதயகலா போன்றவர்கள் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.

 

எட்டு மாவட்டங்களிலும் உறவுகளை தொலைத்து விட்டு போராடுபவர்களை கொச்சைப்படுத்தி வருவதை நிறுத்த அவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

எம்மைப்பற்றி கதைப்பதற்கு உதயகலாவுக்கு எந்த தகுதியுமில்லை.மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்று மீண்டும் இலங்கை வந்து யாரது தேவையினை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்‘  எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை குழப்புவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து சர்வ மக்கள் கட்சியை சேர்ந்த உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளதாக வவுனியா மாவட்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் இன்று (26.03.23) யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெற்ற காலத்திலே தமிழினத்தின் துரோகியாக காணப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க இன்றும் துரோகத்தனமான நரி தந்திரமான செயல்களை முன்னெடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியை தற்போது மீண்டும் முன்னெடுத்துள்ளார். உதயகலாவே தனது கணவர் கடத்தப்பட்டிருந்ததாகவும் இறந்து விட்டதாகவும் கூறியிருந்ததாகவும் தற்போது தனது கணவர் இறக்கவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிடுகின்றார்.

இது ரணில் அரசுடன் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கபட நாடகம். நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த போதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வாழ்வாதாரத்திற்காக போராடவில்லை என்றும் தமது உறவுகளை மீட்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை கோரியே இன்றுவரை போராடுவதாகவும் சிவானந்தன் ஜெனிதா மேலும் தெரிவித்துள்ளார்.