சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை

101 0

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்  இவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதிய உதவியை தடுக்க முயன்றனர் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்தார்.

கம்பஹாவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “ஒரு வருடத்திற்கு முன்பு, மக்கள் எரிபொருட்களுக்கு வரிசையில் காத்திருந்தனர். 7-8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எரிவாயு தீர்ந்துவிட்டது. நாங்கள் அவைகளை மறக்க மாட்டோம். நாங்கள் அதை நினைவில் வைத்திருக்கிறோம்.

ஆனால் இன்று இந்த ஒரு வருட காலப்பகுதியில் பொருளாதாரத்தை நிர்வகிப்பதன் மூலம் நாட்டை அந்த நிலையில் இருந்து விடுவித்து சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது, நாடு முழுவதும் உள்ள இடங்களுக்குச் சென்று போராட்டக்காரர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். அவர்கள் இந்த பொருளாதாரத்தை சிதைக்க விரும்புகிறார்கள்.

இன்று, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், பிள்ளைகளை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொள்கின்றனர். கொழும்பிலுள்ள பெரியாட்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்கின்றனர். அல்லது தனியார் பாடசாலைகளில் படிக்கின்றனர்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். கடந்த ஆண்டு பெப்ரவரியில் அது இல்லாமல் போய்விட்டது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எமது பிக்குவின் தலைவர் ஹிட்லராக மாறுங்கள் என்று கூறியதாக ஞாபகம். நீங்கள் ஹிட்லராக இருக்க வேண்டிய அவசியமில்லை, தேவையான முடிவுகளை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர்.  அனுரகுமாரவின் மகன் மிஹின் லங்காவில் இருக்கிறார். மஹிந்த ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்து தனது மகனை ஸ்ரீலங்கனுக்கு அனுப்பினார்.

இப்போது அவரது மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அதைச் செய்துவிட்டு, கிராமத்து குழந்தைகளை தெருவில் இறக்கிவிட வேலை செய்கிறார். அதனை எதிர்கொள்ளக்கூடிய அரசாங்கம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் பாராளுமன்றத்தில் கூச்சல் போடுகிறார்கள். இவர்கள் தூதுவர்களை சந்தித்து ஐ.எம்.எப் உதவியை கொடுக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால், எங்களிடம் அரசியல் இல்லாததால் அதை செய்ய முடியாது என்று அந்த தூதுவர்கள் கூறினர். அப்படியானால் கடுமையான நிபந்தனைகள் போடுங்கள் என்றனர்.

நிபந்தனைகளை அமைப்பது யார்? வேறு யாருக்காகவும் அல்ல, அந்த நாட்டு மக்களுக்காக. ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சவாலை ஏற்றுக்கொண்ட தலைவர் என்பதாலேயே அவர்களுக்கு நிபந்தனையின்றி உதவுகிறோம்.

ஒரு வருடத்துக்குள் அதைச் செய்தார். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் இலக்கான 69 இலட்சத்துக்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்றார்