பெலாரசை அணு ஆயுத பணய கைதியாக வைத்திருக்கிறது… ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

99 0

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதால் போர் நீடிக்கிறது.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நானும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் ஒப்புக்கொண்டோம் என்றும் புதின் தெரிவித்தார். இதையடுத்து, பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷியா வைத்திருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் குற்றம்சாட்டி உள்ளார்.

ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய ஒரு நகர்வு என்றும், புதினின் அறிவிப்பு பெலாரஸ் மக்களிடையே ரஷியா மீதான எதிர்மறையான கருத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தகக்து.