நடுவானில் மோதுவதுபோல் நெருங்கிய விமானங்கள் !

97 0

நேபாளத்தில் ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்வது போன்று நெருங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 விமானம் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து காத்மாண்டு நோக்கி வந்தது.

காத்மாண்டை நெருங்கியதும் கீழே இறங்கும்போது இரு விமானங்களும் மிகவும் நெருங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ரேடாரில் இதனை கவனித்து, ஒரு விமானத்தை மேலும் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணைய (சிஏஏஎன்) செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிரோலா கூறியதாவது:-

தரையிறங்குவதற்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதே பாதையில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் அருகாமையில் இருப்பது ரேடாரில் தெரிந்ததையடுத்து, நேபாள ஏர்லைன்ஸ் விமானம் உடனடியாக 7,000 அடிக்கு கீழே இறங்கியது.

இந்த கவனக்குறைவு தொடர்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 3 ஊழியர்களை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.