காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

95 0

 கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அண்மையில் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அம்ரித்பால் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அடுத்து, வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த 20-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தூதரகம் தாக்கப்பட்டு, அங்கு பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கனடாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வாரம் கனடாவுக்கான இந்தியத் தூதர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சர்ரேயில் உள்ள தாஜ் பார்க் கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் சமீர் கவுஷல் என்பவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், கனடாவில் இந்திய தூதரகத்திற்கு எதிராகவும், தூதரக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படும் பிரிவினைவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதை நேரில் வலியுறுத்துவதற்காக இந்தியாவுக்கான கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வியன்னா உடன்படிக்கையின் கீழ் கனடா தனது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறும் இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்த நாட்டு அரசு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என நம்புவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.