அறிவியல் மூலம் நிரூபிக்கக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழினமும்தான் என இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். நூலகத்துறை பொது இயக்குநர் இளம் பகவத் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “முதலமைச்சர் அறிவித்தபின் முதலில் திருநெல்வேலியில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெற்றது. அடுத்தபடியாக சென்னை இலக்கியத் திருவிழா, கோவையில் சிறுவாணி இலக்கியத் திருவிழா, தஞ்சையில் காவேரி இலக்கியத் திருவிழா ஆகியவை நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து தற்போது மதுரையில் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் 30க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
தமிழக அரசில் 35 துறைகள் இருந்தாலும் இதில் 30 சதவீதம் அரசு ஊழியர்களைக் கொண்ட துறையாக பள்ளிக்கல்வித்துறை திகழ்கிறது. இதிலுள்ள நூலகத்துறை மூலம் இதுபோன்ற இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுவதையே தமிழக முதல்வர் விரும்புகிறார். அறிவு சார்ந்த, இலக்கியம் சார்ந்த நூல்களை படிக்கும்போதுதான் நாம் யார் என நமக்குத் தெரியும். முதலில் மதுரை, இங்கிருந்துதானா எனவும், மதுரை வேறொரு இடத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். திருவிளையாடல் புராணம் பழைய மதுரை இது இல்லை என்கிறது. முதலாம் தமிழ்ச் சங்கத்தை கடல் அடித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. கண்ணகி எரித்த மதுரையைப் பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதத்திலும் மதுரையைப் பற்றி ஒரு கருத்து இருந்து வருகின்றது. ஆனால் இரண்டு மட்டும் நிலையாக இருந்து வருகிறது. அதில், மதுரை என்ற பெயரும், மதுரை மக்களின் அன்பும் மட்டும் என்றும் மாறாமல் இருந்து வருகிறது.
அத்தகைய இடத்தில் வைகை இலக்கியத்திருவிழா நடைபெறுகிறது. சங்க இலக்கியத்தில் பரிபாடலில் மதுரையின் பெருமைகள் அழகாக எடுத்துச்சொல்லப்படுகின்றன. சங்ககால இலக்கியத்தில் தராசின் ஒரு பக்கத்தில் அனைத்து மாநகரங்களின் பெருமையையும், மறுபக்கம் மதுரை மாநகரின் பெருமையையும் வையுங்கள். அதில், கனம் தாங்காமல் கீழிறங்கும் என்று சொல்லுமளவுக்கு பெருமை வாய்ந்தது மதுரை. இலக்கியங்களும், இலக்கியவாதிகளும் வைகை நிதியின் சிறப்புகளை சொல்லியுள்ளனர். வைகை நதிக்கரையின் மொத்தமுள்ள 256 கிமீ நீளத்தில் 350 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன எனும்போது வைகை நதியின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
அதில் கீழடியில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள் மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் நகர, நாகரிகத்தோடு வாழ்ந்ததற்கான அறிவியல் சான்றுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மூலம் நிரூபிக்கப்படக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழினமும்தான். பொருநை என்பது 3,500 ஆண்டுகள் என்று சொல்கின்றனர். இத்தகைய பெருமைகளை இலக்கியவாதிகளும், இலக்கியங்களும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய திருவிழாக்களை நடத்த தமிழக முதல்வர் ஆசைப்படுகிறார். தமிழக முதல்வர் ஏற்படுத்திக்கொடுத்த கீழடி அருங்காட்சியகத்தை கட்டாயம் ஒருமுறையாவது சென்று பாருங்கள். மதுரையின் வரலாறு, இலக்கியங்களைப் பேச ஒரு நூற்றாண்டு போதாது. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நவீன கால இலக்கியங்களில் தமிழகத்தில் மதுரையை சேர்ந்தவர்களே கொடிகட்டி பறக்கின்றனர்.
மதுரை பகுதியில்தான் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் ஒரு சமூகமாக அடர்த்தியாக உள்ளனர். அரசு நடத்தும் இலக்கிய திருவிழாக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தூதுவர்களாக இருக்க வேண்டும். நாம் யாரென்று தெரிந்துகொள்வதற்கான நிகழ்ச்சி இது. இலக்கியவாதிகளுக்கும் படைப்பாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார். மனிதனை மனிதனாக உணரக்கூடியது இலக்கியம். ஆழ்மனதிலுள்ள செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் போற்றக்கூடிய நிகழ்வாக இந்த விழாவை நடத்திக்கொண்டிருக்கிறோம். கடந்தாண்டு இவ்விழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டில் இதேபோல், புத்தக்கண்காட்சி, இலக்கிய நிகழ்வுகள் நடத்துவதற்கு நிதி அமைச்சர் ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளார்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.