இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சிங்கள அரசினால் தமிழின ஒதுக்கல், தமிழர்தாயக நில அபகரிப்பும், தமிழர்தாயக கனிமவளச் சுரண்டலும் அதே நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடைய பாசாங்கு அரசியலும், அரசியல் வங்குரோத்துத்தனங்களும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் வளர்ச்சியடையத் தடையாக அமைந்துவிட்டன.
இதேவேளையில் சிங்கள தேசம் தன்னை அரசியல் ரீதியாக இஸ்திரப்படுத்தியதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமிப்பதிலும் தொடர் வெற்றியடைந்துவருகிறது. ஆனால் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்காக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அது பிரயோகித்த பொருளாதாரம் என்பது மிகப்பெரியது.
தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக தன்னுடைய முழு பொருளாதாரத்தையும் செலவழித்ததன் விளைவே இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கும் தமிழ் மக்களும், தாயகமும் இப்போதும் பலிக்கடாவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதுதான் துரதிஷ்டம்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கையின் ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பாக வட-கிழக்கின் கனிமவளப் பகுதிகளை சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை வாய்ப்புகளை தருவதாக ஆசைவார்த்தைகாட்டி தமிழினத்தின் எதிர்காலத்தை சூனிய மயமாக்கும் செயல்முறையை இன்றைய அரசு மிக சாதுரியமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழர் தாயகத்தில் உள்ள கனிம வளங்களை புவிச்சரிதவியல் அடிப்படையில் பார்ப்போமானால்
1) மயோசின் கால சுண்ணாம்புக்கல். – இது புத்தளம்-பரந்தன்-முல்லைத்தீவு ஆகிய நகரங்களை இணைத்து நேர்கோட்டை வரைந்தால் அதன் வடக்கு பகுதியில் உள்ள பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல் கனிம வளத்தை கொண்ட பகுதியாகும்.
2) பிளைத்தோசின்கால வண்டல் மண் படிமம். – இது நீர்கொழும்பிலிருந்து முல்லை தீவை நோக்கி ஒரு கோட்டை வரைந்தால் சுண்ணாம்புக்கல் பிரதேசத்திற்கும் இந்தக் கோட்டுக்கும் இடைப்பட்ட சராசரி 20 மைல் அகலம் கொண்ட பகுதி. இப்பகுதியில் கிறவல் மண்மேடுகள் காணப்படுகிறது. இக்கிறவல் இரும்பத்தாது படிமமாகும்.
3) பளிங்குப்பட்டை பாறை – இது மகாவிலாச்சி ,அனுராதபுரம், திருகோணமலை ஆகியவற்றை இணைத்து வரையப்படுகின்ற கோட்டுக்கு இருமருங்கிலும் உள்ள பகுதி.
4) அண்மையகால வண்டல் படிவு. – இது பூநகரி, கௌதாரி முனை பகுதியும் பருத்தித் துறையில் இருந்து திருக்கோவில் வரையிலான தமிழர் தாயகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் மணல் திட்டிகள். இவைதான் தமிழர் தாயகமான வடகிழக்க்கு நிலப்பரப்பில் காணப்படுகின்ற கனிம வளங்கள்.
தமிழ் மக்களின் உயிர் நாடி
இவை தவிர தமிழர் தாயகத்தின் சுற்றியுள்ள கடற்பரப்பும் அதன் இயற்கை வளங்களுமாகும். இந்த வளங்கள்தான் தமிழர் தாயகத்தின் வாழ்வையும், வளத்தையும் வளப்படுத்த வல்லவை. அவற்றை தமிழ் மக்கள் ஒருபோதும் இழக்க முடியாது இழக்கவும் கூடாது. தமிழ்மக்களுக்கே உரித்தானது.
இந்த வளங்களே தமிழ் மக்களின் உயிர் நாடியுமாகும். கனிம வளங்கள் இந்த வளத்தின் பருத்திதுறையில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் மற்றும் நிலாவளியிலிருந்து திருக்கோயில் வரையிலுமான கடற்கரையோர பகுதிகள் காணப்படுகின்ற புவிச்சரிதவியலில் குறிப்பிடப்படும் “பிற்கால வண்டல் மண்படிவு” அதாவது இல்மனைட், மொனசைட், படிக மணல் போன்ற கனிம வளங்களை உலகின் பல்தேசிய நிறுவனங்களுக்கும் வல்லரசுகளுக்கும் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.
தமிழர் தாயகத்தின் கரையோர மீன்பிடி அபிவிருத்தி என்ற பெயரில் இரால் பண்ணைகள், கடல் அட்டைப் பண்ணைகளை உருவாக்குவதற்கு சீன நிறுவனங்களுக்கு பல்லாயிரம் உவர்நீர் நிலப்பரப்புகள் தாரைவார்க்கப்பட்டு இருக்கின்றன. அவ்வாறே திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கொடுப்பதா? இந்தியாவுக்கு கொடுப்பதா என இரண்டு பகுதியினருக்கும் ஆசைவார்த்தை காட்டி இருபகுதியினடமிருந்தும் நல்ல பண வசூலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள அரசு.
அபிவிருத்தி திட்டங்கள்
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கைத்தொழில் விவசாய மீன்பிடி அபிவிருத்தி என்ற அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டங்களால் தமிழர்தாயகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்ததா? தமிழ் மக்களுடைய பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியதா? என்றால் அது இல்லை என்றே பதில் வரும். வடக்கில் இரண்டு பிரதான கைத்தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
காங்கேசன்துறையில் சிமெண்ட் தொழிற்சாலை, இரண்டாவது பரந்தன் இரசாயன தொழிற்சாலைஇந்த இரண்டும் தமிழ் மக்கள் சிலருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்ததுதான். ஆனால் இந்த தொழிற்சாலைகளால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகப் பயங்கரமானது என்பதனை மறந்து விடக்கூடாது. பரந்தனில் இரசாயன தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆணையிறவிலிருந்து பரந்தன் வரையான பகுதியில் புல் பூண்டுகள் முளைக்க முடியாத அளவுக்கு அந்தப் பகுதியில் உப்பு படிவுகள் படியத் தொடங்கின.
அதனால் அந்தப் பகுதியில் மரஞ்செடிகள் கொடிகள் அழிந்து போயின. யுத்தத்தினால் கடந்த 40 ஆண்டுகளாக அந்த தொழிற்சாலை இல்லாமல் போனதன் பிற்பாடுதான் இப்போது அந்த பிரதேசம் சற்று பச்சை பசேலென தெரிகிறது.
சீமெந்து தொழிற்சாலை
புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் வளரத் தொடங்கி இருக்கின்றன என்பதனை நாம் எம் கண்முன்னே பார்க்க முடிகிறது. அதேபோலத்தான் காங்கேசன் துறையில் உருவாக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை யாழ் குடாவில் மிக உயர்ந்த நிலப்பரப்பான கீரிமலை பகுதியில் உள்ள சுண்ணாம்புக்களை அகழ்தடுத்து முருங்கனிலிருந்து கொண்டுவரப்பட்ட களிமண்ணையும் மூலப்பொருளாகக் கொண்டே சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த உற்பத்தியினால் வடக்கின் நிலம் தாழ்ந்து கொண்டு சென்றது. அதே நேரத்தில் இந்த சீமந்தை பயன்படுத்தி மாட மாளிகைகளும், கட்டடங்களும், பெரும் அணைக்கட்டுகளும், பாலங்களும் தென்னிலங்கையில் உயர்ந்து வளர்ந்தது என்பதனையும். தொழிற்சாலைக்காக சுண்ணாம்புக்கல் தோண்டி எடுக்கப்பட்டு பெரும் அதாள பாதாளமான பள்ளங்கள் தோன்றின. தொழிற்சாலையில் இருந்து வெளியாகிய நச்சு புகையும், தூசு படலமும் யாழ்குடாவின் வலிகாமப்பகுதிய ஆக்கிரமித்து அங்கிருந்த விவசாய பயிர்களில் படிந்து நாசப்படுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுடைய சுவாசத்தில் கலந்து பல வகையான நோய்களுக்கு வித்திட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய பின்னணியிற்தான் 1982 ஆம் ஆண்டு யாழ்பல்கலைக்கழக சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. காங்கேசந்துறை தொழிற்சாலையால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றிய ஓர் ஆய்வை யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட. ஓரணி மேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் அறிவியல் சார்ந்த 12 மாணவர்களும் புவியியல் துறை பேராசிரியர் பாலச்சந்திரன் தலைமையில் இரு பேராசிரியர்களும், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ஒருவரம் அடங்கியிருந்தனர்.
இந்த ஆய்வில் ஈடுபட்ட மொத்தம் 15 பேரில் இருவரைத் தவிர மீதி 13 பேர் இன்னமும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கிறார்கள். இதற்கான நிதி பங்களிப்பை அன்றைய கால விடுதலைப் புலிகள் நிதிப் பொறுப்பாளராக இருந்த பண்டிதர் வழங்கியிருந்தார். சீமெந்து ஆலையின் உண்மையான கோப்புகளை ஆய்வு செய்வதற்கான முழுமையான ஆதரவை இந்த அணியுடன் இணைந்து ஆலையின் இரசாயனவியல் பொறுப்பதிகாரி சந்திரமௌலீசன் வழங்கியிருந்தார்.
தொழிற்சாலையின் கழிவுகளினால் சூழல் மாசடைவு
சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் மிக அதிர்ச்சிகரமானவையாய் அமைந்தன. இந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குமானால் வலிகாம பிரதேசத்தின் மரஞ்செடி கொடிகள் எதிர்காலத்தில் முழுமையாக அழிந்துவிடும் என்றும் அதேபோல இந்த தொழிற்சாலையின் கழிவுகளினால் ஏற்படக்கூடிய சூழல் மாசடைவும் அதனால் மக்களுக்கு சுவாசப்புற்றுநோய், தோல்ப் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்பதுதான் அந்த ஆய்வு அறிக்கையின் இறுதி முடிவாகவும் இருந்தது.இந்த ஆய்வறிக்கையைச் சரிபார்த்து அதன்படி சீமெந்துத் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று பரிந்துரைத்தத துறைசார் பேராசிரியர் பின்னாளில் இயற்கை எய்திவிட்டார். மற்றவர் பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றள்ளார். இந்த முடிவின் அடிப்படையிற்தான் ஆலையை மூடுவதற்கான ஒரு மார்க்கத்தை தேடியபோதுதான் அங்கு சுண்ணாம்பு கற்களை உடைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெடிபொருட்களும், வெடிக்க வைப்பதற்கான கருவியையும் (எக்ஸ்புளோடர்) விடுதலைப் புலிகளின் தாக்குதல் பொறுப்பாளராக இருந்த சீலனால் எடுத்துச் செல்லப்பட்டன. அதனை அடுத்து தொழிற்சாலை குறிப்பிட்ட காலம் மூடப்பட்டிருந்தது.
ஆனாலும் காங்கேசன்துறைத் தொழிற்சாலைக்கு அருகில் இருக்கின்ற சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான பள்ளத்தாக்கு பிரதேசத்துக்குள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் கடல் நீர் புகுந்தால் வலிகாம பிரதேசத்தின் நன்னீர் வளம் முற்றாக பாதிக்கப்படும் என்ற அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது. சுண்ணாம்புக்கல் அகழ்வு இலங்கை தீவைப் பொறுத்தளவில் யாழ்குடாவும் அதனை அண்டிய பகுதிகளும் முற்று முழுதாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயப்பகுதி. ஆனால் மற்றைய பகுதிகள் ஆறுகளை மறித்து கட்டப்பட்ட குளநீர்பாச்சனத்தை கொண்ட பகுதிகள்.
எனவே வடக்கின் விவசாயம் என்பது நிலத்தடிநீரை பெருமளவில் தங்கி இருக்கிறது. சுண்ணாம்புக்கல் நிலவுருவப் பகுதியில் சுண்ணாம்புக்கல் அகழ்வு என்பது வடக்கின் சுற்றுச்சூழலையும் மனித வாழ்வையும் பாதிக்கும். அந்த வரிசையில் இப்போது வடக்கில் பூநகரைப் பிரதேசத்தில் உள்ள பொன்னாவெளிப் பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வதற்கான ஆய்வுகள் என்ற அடிப்படையில் அந்தப் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் சிங்கள ஆய்வாளர்களும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வுகள் பற்றி முழுமையான தரவுகள் இன்னும் வெளிவரவில்லை.
எனினும் கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று பொன்னாவழிப் பிரதேசத்தில் சுன்னக்கல் அகழ்வதற்கான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இங்கு அகழ்வு 100 அடி ஆழத்திற்கு மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. பிரதேசம் பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 20 அடிக்கு உட்பட்ட நிலப்பிரதேசமாகும். இங்கே நூறு அடி ஆழத்திற்கு தோண்டுவது மிக ஆபத்தானது.
இவ்வாறு தோண்டப்படும் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து விட்டால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதி உவர் நிலமாக மாறிவிடும். மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாற்றமடையும். பல்வகைப்பட்ட கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகவும் இந்தப் பகுதி விளங்குகிறது. இப்பகுதியில் சுண்ணக்கல் மாத்திரமல்ல வேறும்பல பெறுமதி வாய்ந்த கனிம வளங்கள் இந்த பிராந்தியத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2002-2004 சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அன்றைய வன்னியின் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் அனுமதி கேட்டிருதமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது இந்தப் பகுதி பெரும் வர்த்தக நிறுவனங்களினதும், வல்லரசுகளினதும் கனிமவள வேட்டைக்களமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஆகவே இதற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் குத்துவெட்டுக்களும், கபட நாடகங்களும், பாசாங்கு அரசியல்களும் இங்கே நிகழும் என்பது நிச்சயம். எனினும் இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விவரங்கள் எதுவும் தமக்குத் தெரியாது என நொண்டி காரணங்களை கற்பிப்பதும் ஏற்புடையதல்ல.
ஆய்வு மேற்கொள்ளல்
இலங்கையின் அரசியல் நிர்வாக ஒழுங்கில் பிரதேசசபைக்கு ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி சார்ந்த முழுமையான அதிகாரங்கள் உண்டு.பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி முடிவெடுப்பதில் பிரதேச சபைக்கு பெரும்பலமான அதிகாரங்கள் உண்டு. அந்த அடிப்படையில் பார்த்தால் பூநகரி பிரதேச சபையின் கீழ் அடங்குகின்ற பொன்னாவெளிப்பகுதியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது அல்லது ஒரு சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படப் போகின்றது என்றால் முதலில் அது அந்த பகுதியினுடைய பிரதேச செயலாளருக்கும், அதனுடைய பிரதேச சபைக்கும், அப் பிரதேசம் உள்ளடங்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனைத்து விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.
அத்தோடு அத்தகுதியினுடைய நாடாளுமன்ற உறுப்பினருடனும் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை.ஒரு பிரதேச சபையின் அனுமதியின்றி அந்தப் பிரதேசசபை எல்லைக்குள் ஒரு கட்டிடத்தையோ, ஒரு வீதி புணரமைப்பையோ அல்லது ஒரு கல்லைதானும் நாட்ட முடியாது.
அதனை சட்டரீதியாக தடுக்கவும், அகற்றவும் முடியும். எனவே இவ்வாறு ஒரு மக்களுக்குத் தெரியாத, பிரதேசத்தை பாதிக்கக்கூடிய, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம் ஒன்று இடம்பெற்றால் அதனை பல வழிகளிலும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இன்றைய நிலையில் முடியும்.
அதற்காக பலமான வெகுசனப் போராட்டங்களை எல்லா மட்டங்களிலும் நடத்தி தடுத்திருக்க முடியும். அதனை இன்னும் இந்த அரசியல்வாதிகள் செய்யவில்லை. மாறாக ஊடகங்களில் காட்டுக்கத்து கத்துவதில் எந்த பயனும் கிடையாது. உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள், கடையடைப்புகள், பணிப்புறக்கணிப்புகள் என எந்தப் போராட்டங்களும் கிளிநொச்சியில் அல்லது வடக்கிலோ நடைபெறவில்லை.
இவைகள் ஒன்றும் நடக்கவில்லை என்றால் இதற்குப் பின்னே பின்கதவுகளால் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இனியும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.இதனை இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சராக இருந்த அன்றைய தமிழ் தலைவர் திரு. ஜி. ஜி . பொன்னம்பலம் கிழக்கு மாகாணத்தில் “பட்டிப்பளை” ஆற்றை கல்லோயா என்ற சிங்கள பெயரிட்டு புதிய சிங்களக் கொடியேற்ற திட்டத்தை அன்றைய பிரதமர் டி. எஸ். செனநாயக்க ஆரம்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததையும் அதற்காக பெறப்பட்ட பெரும் பணக் குயிலில் இருந்து கொண்டுதான் இன்று அவருடைய வாரிசுகள் இரண்டு தலைமுறைகள் தமிழ், தேசியம், இருதேச அரசியல் என்றும் பாசாங்கு அரசியல் செய்வது ஜி.ஜி.பொன்னர் தமிழ் மக்களை ஏமாற்றி தாயகத்தை விற்று சேர்த்த சொத்தைப் பாதுகாப்பதற்கான பாசாங்கு அரசியலே என்பதனையும் தமிழ் மக்கள் வரலாற்றில் மறக்கமாட்டார்கள்.
கனிமவள அரசியல் நடைமுறை
அம்பாறை தமிழர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். “வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததை தவிர தெரியாதது என்று ஒன்றும் இல்லை”என்பதுதான் உண்மை ஜி.ஜி யினது வாரிசுகள் இன்று செய்யும் பாசாங்கு அரசியல் போன்றே தமிழ் மக்களை ஏமாற்றி பாசாங்கு அரசியலை பொதுவில் இன்றைய தமிழ்த் தலைவர்கள் பலரும் மேற்கொள்கின்றனர்.
அந்தவகையினதாக இப்போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தகைய ஒரு வளசுரண்டலை, வளவிற்றலைச் செய்கின்ற அரசியல் நடக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலை சூனியமயமாக்கும் செயற்திட்டத்தை பின்கதவால் ஆதரித்து தனக்கும், தன்பிள்ளைக்கும், தன்பேரனுக்கும் அரசியல் நடத்துவதற்கான சொத்தை சேகரிக்கின்ற நாசக்கார அரசியல் நடத்தப்படுகிறது. இன்று இந்த கருத்தை பலரும் எதிர்க்க கூடும். ஆனால் இதே அரசியல்வாதிகளின் பிள்ளையும் பேரனும் அந்த மண்ணில் துரோகத்தின் மீதமர்ந்து அரசியல் நடத்துவதை வரலாறு நிச்சயம் நிரூபிக்கும்.
காங்கேசன்துறை சீமெந்து ஆலை, கல்லோயா குடியேற்றம் போன்ற வரலாற்று அனுபவத்திலிருந்து இன்றைய இந்த கனிமவள அரசியலை நோக்க வேண்டும். எனவே இன்றைய இந்த அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நம்பி இருக்காது தம்முடைய பிரதேசத்தின் அபிவிருத்தியும், தமது பிரதேசத்தின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அறிவு பூர்வமாக எடுக்க வேண்டியது அவசியமானது.
தி.திபாகரன், M.A