மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம், வருடந்தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கான ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்து வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இன்று மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு தையல் போதனாசிரியை திருமதி.நந்தினி ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடா வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மோகன் பிறேம்குமார், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் நலன்புரி சங்க தலைவர் எஸ்.தில்லைநாதன், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜெகதர்சன் மற்றும் ஜெயந்திபுரம், கருவேப்பங்கேணி, பாரதிபுரம், மட்டிக்களி, புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகள் கலந்துகொண்டனர்.