வீரமாங்குடி அச்சு வெல்லம், பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்

113 0

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீரமாங்குடி அச்சு வெல்லத்துக்கும், பேராவூரணி தேங்காய்க்கும் புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முற்சிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இவற்றுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை சுமார் 40 பொருட்களுக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லத்துக்கும், பேராவூரணி தேங்காய்க்கும் புவிசார் குறியீடு பெற முயற்சி எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் கொப்பரை மூலம் பாகு காய்ச்சி, அதனை மர அச்சில் ஊற்றி அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் திருவையாறு முதல் கும்பகோணம் வரை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடைப்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் பலர் தங்களது வீடு, தோட்டத்திலேயே கொப்பரை மூலம் அச்சுவெல்லத்தை காய்ச்சி வருகின்றனர். இதில் வீரமாங்குடி பகுதியில் அதிகமாக அச்சுவெல்லம் காய்ச்சப்படுவதால், வீரமாங்குடி அச்சு வெல்லம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.