வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்

97 0

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் இரத்து செய்ய நேரிடும்.

இதனால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் ஏதாவதொரு வழியில் பாதிக்கப்படுவார்கள், ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதையிட்டு பட்டாசு வெடித்து, கொண்டாடுவது அவசியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1998 ஆம் ஆண்டு இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலையில் இருந்து நடுத்தர வருமானம் பெறும் நாடாக உயர்வடைந்தது.இதனால் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு சர்வதேசத்தினால் கிடைக்கப் பெறும் உதவிகள்,ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவில்லை.

இதனால் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர வரவு செலவு பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்ய முதன் முறையாக திறைசேரி உண்டியல்,திறைசேரி பிணைமுறிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.இதன் பின்னர் பல்வேறு நாடுகளிடமிருந்து நிதி மற்றும் ஏனைய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றன.

வெளிநாட்டு அரசமுறை கடன்களினால் ஏற்படும் பாரிய பொருளாதார நெருக்கடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்கு விளங்கிக் கொண்டு 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலை 2015 ஆம் ஆண்டு நடத்தினார்.2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையின் அரசமுறை கடன் நிலைபேறான தன்மையினை இழந்துள்ளது என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு இலங்கை வங்குரோத்து நிலை அடையும் என குறிப்பிடப்பட்டது.

வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் அப்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டது,சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டது.

இலங்கையின் கடன் நிலை ஸ்தீரமற்ற நிலையில் உள்ளது,கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்படும்.இதனால் இலங்கை வங்குரோத்து நிலை நோக்கிச் செல்லும் என சர்வதேச நாணய நிதியம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாக புலனாய்வுத் தகவல் கிடைக்கப் பெற்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவி;ல்லை,ஆகவே குண்டுத்தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி,பிரதமர்,பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அமைச்சரவை பொறுப்புக் கூற வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் பொருளாதார பாதிப்பு தொடர்பில் சர்வதேசம் வழங்கிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை,ஆகவே பொருளாதார பாதிப்புக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

10 பிரதான நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.கடந்த காலங்களை போன்று இம்முறையும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற முடியாது.2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மொத்த தேசிய உற்பத்திகளை 2.3 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் குறுகிய காலத்திற்குள் தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதற்கமைய 2026 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மொத்த தேசிய வருமானத்தை 15.3 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள வேண்டும். 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிபரல் கொள்கையை பின்பற்றியவர்களினால் 12 சதவீதமாக காணப்பட்ட தேசிய வருமானம் 8 சதவீதமாக வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது.

2026 ஆம் ஆண்டு அரச செலவுகள் 19.4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும்.மொத்த தேசிய உற்பத்திகளை குறுகிய காலத்திற்குள் அதிகரித்துக் கொள்வது இலகுவானதொரு காரியமல்ல,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய சராசரி நிதி அவசியத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமாயின் தேசிய கடன்  அறவீட்டை குறைந்த மட்டத்தில் நீக்க  வேண்டும்.

ஆகவே ஊழியர் சேமலாப நிதியம்,வங்கி வைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆகவே சர்வதேச நாணய நிதியததின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி பெருமை கொள்வது அவசியமற்றது.இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் நிலையை காண்பித்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் ஜனநாயகம்,மனித உரிமைகள்,நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் ஆகிய காரணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்,பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் கிறீஸ்,ஆஜன்டீனா,லெபனான் ஆகிய நாடுகளின் நிலையே இலங்கைக்கு ஏற்படும் என்றார்.