வரி திருத்தக் கொள்கையை மீளப் பெறுமாறும், வங்கி வட்டி வீதங்களை குறைக்குமாறும் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உதாசீனப்படுத்தியுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிற்சங்கங்களை முடக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்குமானால், தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள வேலைநிறுத்த போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைத்தியர்கள், வங்கி, துறைமுகம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மின்சாரம், நீர் வழங்கல், அதிபர் – ஆசிரியர்கள், தாதியர் உள்ளிட்ட அரச துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அதற்கமைய கடந்த 15ஆம் திகதி பல அத்தியாவசிய சேவைகள் முடங்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையின் காரணமாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இடைக்கால தீர்வினையேனும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்டது.
எனினும், ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் தமக்கான எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
எனவே, வேலைநிறுத்த போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் எம்மால் அத்தியாவசிய சேவைகளை முடங்கச் செய்ய முடிந்தது. இதன் காரணமாக அரசாங்கம் எம்மை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததோடு, எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் அளித்தது.
ஆனால் வழமையைப் போன்று மீண்டும் மீண்டும் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் என்ற ரீதியில் இலட்சக்கணக்கான தொழிற்சங்கத்தினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
எனவே, எமது கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வினை வழங்காவிட்டால், தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள வேலைநிறுத்த போராட்டத்தினை மீண்டும் முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கின்றோம்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு இடைக்கால தீர்வுகளையேனும் வழங்காவிட்டால், அடுத்த வாரம் சகல தொழிற்சங்க உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு வீதிக்கிறங்கி போராடுவோம் என்றார்.