மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்துச் செல்வதை நோக்காகக் கொண்டு முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உதயமாகியுள்ளது.
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தபால் பெட்டி சின்னத்தில் 9 சிவில் அமைப்புகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளதுடன், இலங்கை அரசியல் வரலாற்றில் சிவில் அமைப்புக்களுடன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்று கைகோர்த்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டணியில் சிவில் செயற்பாட்டாளரும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அசேல சம்பத், தமிழ் தேசிய பணிக்குழு தலைவர் நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்ட மகா சபைத் தலைவர் எஸ். ராஜேந்திரன், அகில இலங்கை சிறுகைத்தொழில் சங்கத்தின் ஸ்தாபகர் நிலூஷ குமார, தாழ்நிலை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் கால்லகே, தேசிய நுகர்வோர் சங்கத்தின் தலைவர் என்.பீ.கே. வணிகசிங்க, முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.எச். இஸ்மாயில், தோட்டத் தொழிலாளர் உரிமை மையத்தின் தலைவர் எஸ்.ஜே.சீ. விஜேதுங்க, இலங்கை சமத்துவ கூட்டணியின் பொதுச்செயலாளர் குவால்டின் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துகொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
9 சிவில் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (25) காலை கொழும்பு 7இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுத்து, தமக்கே உரிய தனித்துவமான பாதையில் பயணிப்பதே எமது பிரதான நோக்கமாகும் என ஜனநாயக தேசிய கூட்டணித் தலைவர் பிரபா கணேசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த கூட்டணியானது ஒரு வித்தியாசமான கூட்டணியாகும். இந்த சிவில் அமைப்புக்களானது மக்களோடு மக்களாக நின்று செயற்படுகிறது. மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை சரியான வகையில் புரிந்துகொண்டு எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய காரணத்தினால்தான் இவ்வகையான கூட்டணியை நாம் அமைத்தோம்.
எமது கூட்டணியானது, ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சேர்ந்த கூட்டணியாக அல்லாமல், சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்த கூட்டணியாகும். இந்த கூட்டணியுடன் இரண்டு அரசியல் கட்சிகள் இணைவதற்கு தங்களது ஆர்வத்தை தெரிவித்திருந்தபோதிலும், அவற்றை நான் தள்ளி வைத்துவிட்டே இந்த கூட்டணியை ஆரம்பித்தேன்.
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கும், ஒரு ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்குமே நாம் ஒன்றிணைந்தோம்.
இந்த கூட்டணியை கூட்டுத் தலைமை இருக்கக்கூடிய விதத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். தமிழ் தலைமை, முஸ்லிம் தலைமை, சிங்கள தலைமை என மூன்று இணை தலைமைகளை உருவாக்கியே கூட்டணி முன்னோக்கி செயற்பட வேண்டும் என எண்ணினேன்.
எனினும், அவர்கள் தங்களிடையே கலந்து பேசி, அவ்வாறு செய்வதை விரும்பாமல் தமிழ் தலைமையின் கீழ் செயற்பட தயார் எனக் கூறி தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.
இந்த கூட்டணியானது எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களுக்கும் பலமிக்க கூட்டணியாக விஸ்தரிக்கப்பட்டு, எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அசேல சம்பத், நிலூஷ போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வருகை தந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான உற்சாகத்தை எங்களுக்கு தந்த வண்ணம் உள்ளனர்.
ஆகவே, அதன் அடிப்படையில், விலைவாசி அதிகரித்துள்ளமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான போராட்டங்களையும் ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சுரேஷ் கங்காதரன், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எஸ். ஜேக்கப் ஆகியோர் உரை நிகழ்த்தியதுடன், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் பெர்னாண்டோ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.