ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

292 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஜப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன்படி இவ்வருடம் ஜப்பான் நிறுவனமொன்றின் முதலீட்டை கொண்டு வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல வடக்கு கிழக்கு பகுதிகளில் பலதரப்பட்ட முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கந்தளாய் சீனி தொழிற்சாலையின் செயற்பாடுகள் மூன்று நாடுகளின் கூட்டு பங்காண்மையின் கீழ் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை கூட்டுச்சேர்ந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளது.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட நகர்வுக்கு விவசாய அமைச்சு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.