அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்

101 0

அமெரிக்கர்களை உளவு பார்த்து சீன அரசுக்கு தகவல் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீனா அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசு துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் டிக் டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதில் டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அதன் சிஇஓ சவ் சி சூவ் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார்.

அங்கு அவர் பேசும்போது, “எங்கள் நிறுவனம் சீனாவுக்காகவோ, பிற நாடுகளுக்காகவோ செயல்படவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். எங்கள் தளத்தை 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பது நன்கு தெரியும்” என்றார்.

மேலும், கலிஃபோர்னியாவை சேர்ந்த எம்.பி. ஒருவர், டிக் டாக் சீனாவை சேர்ந்த நிறுவனமா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு, “டிக் டாக் உலகளாவிய நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் தலைமையகம் உள்ளது . டிக் டாக் உளவு பார்க்கிறது என்ற கருத்து முற்றிலும் கற்பனையானது” என்று பதிலளித்திருக்கிறார்.

சுமார் ஐந்து மணி நேரம் அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் பதிலளித்திருக்கிறார்.