போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த கூடாது!

147 0

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றம் இன்று (24) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாணய நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான 2 ஆம் நாள் விவாதம் ஆரம்பமானது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்காது, எரிபொருள் பிரச்சினை தீராது, மின்சாரப் பிரச்சினை தீராது என்றெல்லாம் எதிரணிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இவற்றுக்கு ஜனாதிபதி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். அன்று நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையை சீர்படுத்தியுள்ளார். எனவே, மக்கள் மத்தியில் போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துவதற்கு முற்படக்கூடாது.

மக்கள் மத்தியில் பொய்யுரைக்கப்பட்டு, அரசியல் ரீதியில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணம். கடந்த காலங்களில் நடந்த தவறை ஜனாதிபதி தற்போது சீர்செய்துள்ளார். உண்மை நிலை என்னவென்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

சமூர்த்தி மற்றும் நலன்புரி கொடுப்பனவின்போது மலையக மக்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டது. எதற்கு சமூர்த்தி என சில அதிகாரிகள்கூட கேட்கும் நிலை இருந்தது. ஆனால் புதிய முறைமையின் கீழ் அத்திட்டம் உரிய முறைமையில் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்.

சிறந்த பொருளாதாரம் நிலவ வேண்டுமெனில் மத்திய வங்கி சுயாதீனமாக இயங்க வேண்டும்.

பொருளாதார மறுசீரமைப்போடு சமூக மறுசீரமைப்பும் இடம்பெறுதல் அவசியம். ஏனெனில் சமூக மறுசீரமைப்பின்றி, பொருளாதார மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது.

இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடாகும். அனைத்து இன மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் உரிதிப்படுத்தப்பட வேண்டும். உலகம் முன்னோக்கி செல்லும்போது நாம் ஏன் பின்னிலையில் இருக்கின்றோம் என சிந்திக்க வேண்டும்.

பாலின சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 50 வீத பெண் எம்.பிக்கள் இருக்கின்றனர். எமது நாட்டில் 52 வீதமானோர் பெண்கள். ஆனால் 5 வீதமே பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றது. எனவே, பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.´´ என்றார்.