கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு கோரி குழந்தையின் தந்தை மனு

105 0

கோட்டை தொடருந்து நிலையத்தில் அண்மையில் தொடருந்தொன்றின் மலசலக்கூடத்தில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயும், தந்தையும் திருமணம் செய்துகொண்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குழந்தையின் தந்தையால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு கோரி குழந்தையின் தந்தை உரிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது குழந்தை தொடர்பில் கோட்டை நீதவான் விசாரித்த போது, கடந்த 18ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், பிள்ளையும் மனைவியும் கொஸ்ஸின்ன பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண சான்றிதழையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். நன்னடத்தை அதிகாரியின் மேற்பார்வையில், கடுமையான நிபந்தனைகளின் கீழ் குழந்தையை பெற்றோரின் பாதுகாப்பில் வைக்குமாறு கடந்த 17ம் திகதி உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் எதிர்கால நன்னடத்தை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.