நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை: கிழக்கு மாகாண ஆளுநர் தகவல்

111 0

கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு ஆளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷனுடன் நேற்று (23.03.2023) இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தங்களுடன் சகவாழ்வும் நல்லிணக்கமும் உள்ளதா என கனடாவில் வாழும் இலங்கையர்கள் அடிக்கடி கேட்பதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், தான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் நிபுணர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்காதது வியப்பளிப்பதாக ஆளுநர் அனுராதா யஹம்பத் கூறியுள்ளார்.இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.