கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் சாதகமான நடவடிக்கை

266 0

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதியின் பிரகாரம் ஒரு கிழமை காலக்கெடு நிறைவடைவதற்குள் கிழக்கு பட்டதாரிகள் தொடர்பில் சாதகமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி கிழக்கு முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததுடன் அதே தினம் இரவு பிரதமர் அலுவலகத்தினால் சாதகமான அறிவிப்பு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது

இதனடிப்படையில் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு பிரதமர் அலுவலகம் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்த்தின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கௌரவ கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கௌரவ கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி, தேசிய கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுனர் செயலாளர், தலைமை செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் இதன் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மாகாணத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான 2 ஆயிரத்து 727 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கும் சிங்கள மொழி மூலமான 1371 வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் கிழக்கு மாகாண முதலமைசச்ர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முழு முயற்சியினால் சாத்தியப்படவுள்ளது.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் அவரின் ஆ லோசகர் ஆர்.பாஸ்கரலிங்கத்தின் நடவடிக்கையில் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திறைசேரியில் இடம்பெறவுள்ளது.

புதிய நியமனங்கள் மற்றும் தேசிய தொழில்வாய்ப்புக்களுக்கான நிதி திறைசேரி மூலமே வழங்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

கிழக்கில் ஆளணி வெற்றிடங்கள் அடையாளங்காணப்படாத நிலையில் முதன் முதலில் கிழக்கில் 5021 வெற்றிடங்கள் உள்ளன என்பதை அனைத்து தரப்பினருக்கும் உரத்துக்கூறி தமது மாகாணத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும், கிழக்கின் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சரே கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கல்வியியற் கல்லூரி நியமனத்தின் போது தேசிய கல்வியமைச்சுக்கு நேரடியாக சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் போராடி கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை தமது சொந்த மாகாணத்தில் பெற்றுக் கொடுக்க கிழக்கு முதலமைச்சர் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை பலரது பாராட்டை பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

கிழக்கில் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்தே அவர்களை நேரில் சந்திப்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உறுதி பூண்டிருந்த நிலையிலேயே பிரதமரை சந்தித்து பட்டதாரிகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.