அரியலூரில் இருந்து 2012-ல் திருடப்பட்டு கடத்தப்பட்ட 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

109 0

அரியலூர் மாவட்டத்திலிருந்து திருடப்பட்டு கடத்தப்பட்ட 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி வெள்ளூரில் வரதராஜபெருமாள் தேவி, பூதேவி கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் இருந்த வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,அனுமன் ஆகிய உலோகத்தினால் செய்யப்பட்ட 4 சாமி சிலைகள் கடந்த 2012-ம் ஆண்டு திருடப்பட்டது.

இதுகுறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். பின்னர் இந்த வழக்கு தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 2020-ல் மாற்றப்பட்டது. விசாரணையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில், அனுமன் சிலை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததும், பின்னர் அந்த சிலையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் சுமார் 37,500 அமெரிக்க டாலருக்கு வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

பின்னர் போலீஸாரின் தொடர் நடவடிக்கை காரணமாக அந்த சிலை மீட்கப்பட்டு இந்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையிடம் இருக்கும் அந்த அனுமன் சிலை விரைவில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் முறைப்படி சிலை திருடுபோன அதே கோயிலில் நிறுவப்படும்.

 

ஆஸ்திரேலியாவில் இருந்து அனுமன் சிலையை மீட்டு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டினார்.

மீட்கப்பட்ட அனுமன் சிலை சுமார் 500 ஆண்டுகள் பழமையானது எனவும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.