மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்ட அரசாணை

101 0

பின்னணி பாடகர் மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் வாழ்ந்த மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலையின் பெயர் டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியாற்றி, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் தனது இன்னுயிரை தியாகம் செய்த பார்த்திபனை கவுரவிக்கும் வகையில், அவர் வசித்து வந்த புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி பகுதி மேலரத வீதியை, ‘லெப்டினன்ட் பார்த்திபன் தெரு’ என பெயர் மாற்றம் செய்ய,புளியங்குடி நகராட்சிக்கு அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்த தினம் மார்ச் 24-ம் தேதி (இன்று) வருவதையொட்டி, சென்னை மாநகராட்சி 9-வது மண்டலம், வார்டு எண் 126-ல் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள சென்னை மந்தைவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயரை ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.