நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் சுகபோகமாக வாழ்கின்ற நிலையில் பொருளாதார சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு சமூக கட்டமைப்பில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வங்குரோத்து நாடு என நாட்டு மக்கள் அறிவிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி, இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என அறிவித்தது.
பெற்றுக்கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாமல், வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டோம் என அரசாங்கம் 2022.04.12 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இலங்கை ஓர் ஏழ்மையான குறைந்த வருமானம் பெறும் நாடு என அமைச்சரவை அறிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை தொகை கிடைக்கப் பெற்றவுடன் ‘வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டோம்’ என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
‘வங்குரோத்து’ என அரசாங்கம் அறிவித்தது, ‘வங்குரோத்து நிலையில் இருந்துவிட்டோம்’ என அரசாங்கம் அறிவிக்கிறது, இதில் நாட்டு மக்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
தேசிய உற்பத்தித் துறைக்கு மதிப்பளிக்காமல் இறக்குமதி துறைக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கியதன் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு பெருமை கொள்வதை காட்டிலும் வெட்கப்பட வேண்டும். பட்டாசு வெடித்து கொண்டாடுவதை விடுத்து இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை தற்போது கொண்டாடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னெடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அப்போது எதிர்க்கட்சி உறுப்பினராக பதவி வகித்தார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஆண்டு சர்வகட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன, அவற்றை நாட்டு மக்களுக்கு அறிவியுங்கள் என ரணில் விக்ரமசிங்க அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்.
இதற்கு பசில் ராஜபக்ஷ ஆத்திரமடைந்து ‘நிபந்தனைகளை குறிப்பிடப் போவதில்லை’ என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் முறையாகவும் தெளிவாகவும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு வெளிப்படைத் தன்மையுடன் காணப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக குறிப்பிட்டதன் பின்னரே அரசாங்கம் குறித்த அறிக்கையை தெளிவற்ற வகையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.
எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மின்கட்டண அதிகரிப்பு ஆகியன சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் குறிப்பிட்டது.
ஆனால், தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 154 நிபந்தனை அறிக்கையில் 107, 108 மற்றும் 109 ஆகிய பக்கங்களில் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, நாட்டு மக்களை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார்.
ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தை குறை கூற முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை 16 தடவைகள் பெற்றுக்கொண்ட பின்னணியில் தான் வங்குரோத்து அடைந்தது. தற்போது 17ஆவது தடவையாக நிதியுதவி ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த ஒத்துழைப்பு சமூக கட்டமைப்பில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.