வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றிய உண்மைகளும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உளவியல் சித்திரவதைகளும்

138 0

 மார்ச் 24! மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமைக்கான சர்வதேச தினம்.

மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாக்கி, பலரின் வாழ்வைப் புரட்டிப்போடும் மனித உரிமை மீறல்களும் அவைபற்றிய உண்மையை வெளிப்படுத்தவேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பும் வரலாறும் இலங்கைக்குப் புதிதல்ல. எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமைக்கான நாளில் தம்மக்களின் மனித உரிமைகளையும் மனித மாண்பையும் பாதுகாக்கவேண்டிய தார்மீகக் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு அதுபற்றிப் பாடமெடுக்கவேண்டியிருப்பது கவலைக்குரிய விடயமே.

இலங்கையின் வரலாற்றை எடுத்துநோக்குகின்றபோது தனிநபர் சார்ந்தும், ஓர் சமூகம் சார்ந்துமென பெருமளவான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அவற்றில் ஏராளமான சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் ஆண்டாண்டு காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 13 வருடகாலமாக எவ்வித தீர்வுமின்றி, வெறும் பேசுபொருளாக மாத்திரமே இருந்துவரும் ‘காணாமல்போனோர் அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்’ மிகமுக்கியமானது.

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பின் பிரகாரம் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உண்டு. இருப்பினும் அதனைமீறி 1980 களில் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன என அறியப்படும் மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போதும், அதன்பின்னரான மூன்று தசாப்தகால ஆயுதமோதலின்போதும் பெருமளவானோர் திட்டமிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புக்களும் நீண்டகாலமாக ஆராய்ந்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வருகின்றன.

ஆனால் அதற்கான தீர்வென்பது தொடர்ந்தும் எட்டாக்கனியாகவே இருந்துவருகின்றது. இருப்பினும் மூன்று தசாப்தகால ஆயுதமோதலின்போதும், அது முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட இறுதிக்காலகட்டத்திலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி வட, கிழக்கில் தமிழ் தாய்மாரால் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் நேற்றுடன் (மார்ச் 23) 2223 நாளாகவும் தொடர்கின்றது.

அதேபோன்று 1980 களில் ஜே.வி.பி எழுச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி தெற்கில் சிங்களத் தாய்மாரும் போராடிவருகின்றனர். எனவே பலரும் கூறுவதைப்போல இது இனரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட விவகாரமல்ல. மாறாக இன, மதபேதங்களைத் தாண்டிய உணர்வு ரீதியிலான போராட்டம்!

‘முடிந்ததைப்பற்றிப்பேசிப் பயனில்லை. கடந்துவரப்பழகுங்கள். மறந்து, மன்னியுங்கள். நல்லிணக்க நீரோட்டத்தில் கலந்துவிடுங்கள்’ என்று பேசுகிறவர்கள், உண்மையை அறிந்துகொள்வதற்குப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கிற உரிமையையும், உண்மையை அடித்தளமாகக்கொண்டே நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்ற யதார்த்ததையும் மறந்துவிடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறந்தள்ளிவிடுகிறார்கள். இவையெல்லாம்தாண்டி ‘காணாமல்போன தமது உணர்வுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற உண்மையை அறியாமல் அவர்களது அன்புக்குரியவர்களோ அல்லது குடும்பங்களோ உளவியல் ரீதியில் அனுபவிக்கும் சித்திரவதையையும், அதனால் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் உடலியல் உபாதைகளையும் ஏன் மனிதாபிமான ரீதியில் புரிந்துகொள்ள முற்படுவதில்லை?

‘வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையைக் கூறவேண்டியதன் அவசியமென்ன என்று கேட்பதற்கு யாருக்கு உரிமை இருக்கின்றது? நீங்கள் உங்களுடைய மூக்குக்கண்ணாடியையோ அல்லது கையடக்கத்தொலைபேசியையோ அல்லது தங்கச்சங்கிலியையோ தொலைத்துவிட்டால் பதறிப்போவீர்கள் அல்லவா? அதைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு உங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள் அல்லவா? உயிரற்ற ஒரு பொருளுக்கே அத்தனை மதிப்பு என்கிறபோது, ஓர் உயிரைத் தொலைத்துவிட்டுத் தேடும் குடும்பங்களுக்கு அதுபற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை இருக்கின்றது. சில குடும்பங்கள் உண்மையை மாத்திரம் கோரலாம். சில குடும்பங்கள் அதற்கான நீதியையும் கோரலாம். அது முற்றிலும் அவர்களைப் பொறுத்தது’ என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ‘இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? என்ற உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்ற அவர், ஆனால் அந்த உண்மையைக்கூற மறுப்பதன் மூலம் ‘இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறும்’ என்ற விடயமே ஆணித்தரமாக நிலைநிறுத்தப்படுகின்றது என்கிறார்.

நாடளாவிய ரீதியில் பல்வேறு காலப்பகுதியில் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் முறைப்பாடுகளை சேகரித்து, அவைபற்றிய விசாரணைகளின் மூலம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்காகக் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு பொதுமக்களுடன் தொடர்புடைய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இற்றைவரையில் கிடைக்கப்பெற்றிருக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெறும் 14,988 மாத்திரமே.

இது நேரடியாகக் கிடைக்கப்பெற்ற 21,374 மொத்த முறைப்பாடுகளில் காணாமல்போன முப்படைகளைச்சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரேநபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவான 2644 முறைப்பாடுகளையும் கழித்துப்பெறப்பட்ட இறுதித்தொகையாகும். இவற்றில் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2647 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதுடன், 104 முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று முறைப்பாடளித்த குடும்பங்களின் தேவைப்பாட்டுக்கு அமைய 34 பேருக்கு இறப்புச்சான்றிதழையும், 197 பேருக்குக் காணாமல்போனமைக்கான சான்றிதழையும் வழங்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பதிவாளர் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆக இங்கே போராடிக்களைத்த குடும்பங்களின் தேவை எத்தகையதாக இருப்பினும், காணாமல்போனவருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியாமல் இறப்புச்சான்றிதழோ அல்லது காணாமல்போனமைக்கான சான்றிதழோ வழங்குவது எப்படி? மனிதாபிமான ரீதியில் இது நியாயம்தானா? என்ற கேள்விகள் தொக்குநிற்கின்றன.

ஆனால் முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நிறைவுசெய்யாமல் அவ்வழக்குகளை (சம்பவ முறைப்பாடுகளை) முடிவுறுத்தமாட்டோம் என்று உறுதிபகர்கிறார் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளரும் சட்டத்தரணியுமான மகேஷ் கட்டுலந்த. ‘கடந்தகாலங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக அடையப்படாமலிருந்த முன்னேற்றங்கள் தற்போது படிப்படியாக அடையப்பட்டுவருகின்றன.

நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதுடன் இலங்கையர் என்ற தனித்த அடையாளத்துடன் நாமனைவரும் முன்நோக்கிப்பயணிக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதனை அடைவதற்கு இனங்களுக்கிடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும். உண்மையை அடிப்படையாகக்கொண்டே அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்’ என்றும் அவர் கூறுகின்றார்.

இருப்பினும்கூட இலங்கை அரசாங்கங்களின் கடந்தகால வரலாறுகள், தீர்வை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் முகவரியற்றுப்போனமை, நீதிகோரும் நீண்டகாலப்போராட்டங்கள் தொடர்பில் அரசியல் தலைமைகளின் பாராமுகம், ஆண்டாண்டுகாலமாக நாட்டை ஆண்ட அரசாங்கங்களுக்கு நெருக்கமானவர்களே மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பாளிகள் என்ற ஆதாரங்களின் அடிப்படையிலான சந்தேகம் என்பன இவ்வலுவலக செயற்பாடுகள்மீது பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழப்பதற்குக் காரணமாகியிருக்கின்றது.

நிலைமாறுகால நீதி என்ற கோட்பாட்டில் உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை என்பது இன்றியமையாத கூறு என்றும், ‘காணாமல்போனவர்கள் வருவார்களா? என்று தெரியாமல் நிர்க்கதியாக வாழ்வதை விடவும், அவர்கள் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டு நிம்மதியாக வாழ்வதென்பது பாதிக்கப்பட்ட தரப்பின் கோணத்தில் முக்கியமானது’ என்றும் குறிப்பிடுகின்ற கொழும்புப் பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்றைகள் நிலையத்தின் பிரதிப்பணிப்பாளரும் விரிவுரையாளருமான ஹக்கீம் அபூபக்கர், உலகநாடுகளின் வரலாற்றை எடுத்துநோக்குமிடத்து ஆயுதமோதலுக்குப் பின்னரான உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் தென்னாபிரிக்கா போன்று நன்மையடைந்த பல நாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுவதுடன், உண்மைகள் கண்டறியப்பட்டு அவை எதிர்கால சந்ததிக்காக ஆவணப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றார்.

மனித உரிமைகள் என்ற ரீதியிலும், அதனை முன்னிறுத்திய தர்க்க நியாயங்களின் அடிப்படையிலும் இவ்விவகாரத்தை அணுகுவது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட தரப்பினரின் பக்கமிருந்து – மனிதாபிமான ரீதியிலும் உளவியல் ரீதியிலும் இதனை அணுகுவது அவசியம். தெற்கில், குறிப்பாக 1980 களில் ஜே.வி.பி எழுச்சியின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சுமார் 30 வருடகாலமாக இணைந்து பணியாற்றிவருபவரும் சிவில் சமூக செயற்பாட்டாளரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாண்டோ, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நாளாந்தம் அனுபவிக்கும் ‘உளவியல் சித்திரவதையை’ இவ்வாறு விளக்குகின்றார்:

‘மனிதப்பிறவி எடுத்தவனுக்கு நிச்சயம் இறப்புண்டு என்பதை அனைத்து மதங்களும் போதிக்கின்றன. எனவே நாம் ஒருவர்மீது அளவுகடந்த நேசத்தை வைத்திருந்தாலும்கூட, அவர் மரணித்துவிட்டார் என்பதை அறிந்த பின்னர் ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ அல்லது சில வருடங்களிலோ அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளப் பழகிவிடுகின்றோம்.

ஆனால் காணாமல்போதல் அல்லது வலிந்து காணாமலாக்கப்படல் என்பது அவ்வாறானதல்ல. அவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் திரும்பி வருவார்களா? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. இது ஒருவிதமான ‘உளவியல் சித்திரவதை’. பாதிக்கப்பட்ட தரப்பினர் அனுபவிக்கும் இந்த உளவியல் சித்திரவதை, நாளடைவில் அவர்களுக்கு தீவிர உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்ற விடயம் மருத்துவ ரீதியில் நிரூபணமாகியிருக்கின்றது. காணாமல்போன தமது உறவுகளைத்தேடி, அந்த நீண்டகாலத் துயரத்தின் விளைவாகப் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிலரை நானறிவேன்.

அதேபோன்று இச்சித்திரவதையைக் கையாளமுடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட ஒருவரையும் நானறிவேன். எனவே இவ்விடயத்தில் உண்மையை அறிந்துகொள்வதொன்றே பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான ஒரேயொரு வழியாகும்’ என்கிறார் பிரிட்டோ.

இவ்விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்பவற்றுக்கு அப்பால், முதலில் ‘வலிந்து காணாமலாக்கப்படல்’ என்பது ஒரு குற்றம், அதுவோர் மனித உரிமை மீறல் என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் அவசியம்.

அதேபோன்று ‘உண்மையையும் நீதியையும்கோரி நாளாந்தம் வீதிகளில் போராடிவரும் தாய்மாரின் பின்புலத்தில் இருந்து அவர்களை இயக்குகின்ற சக்தி எது?’ என்று ஆராய்வதைத்தாண்டி, ‘இதேபோன்றதொரு சம்பவம் எனது வீட்டில் நிகழ்ந்திருந்தால்….’ என்ற உணர்வு ரீதியான கோணத்திலும் இதனை அணுகுவது முக்கியம். நேற்று யாருக்கோ நிகழ்ந்தது, நாளை எமக்கு நிகழாதென்ற உத்தரவாதங்கள் ஏதும் இங்கில்லை. எனவே மனித உரிமை மீறல்களை – வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை மன்னிப்பதும் மறப்பதும் ஒருபுறமிருக்க, முதலில் அவைபற்றிய உண்மையைக் கூறுங்கள் என்ற கோஷம் பாதிக்கப்பட்ட தரப்பிடமிருந்து மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுமக்களிடமிருந்தும் பிறக்கவேண்டும் என்பதே ‘மார்ச் – 24 : உண்மையை அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தின்’ சுருக்கம்.

நாகராஜா தனுஜா