அரச சேவையாளர்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சானக வகும்பரவின் ஆலோசனை

124 0

சத்திய கடதாசி ஊடாக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சட்டமாதிபரிடம் ஆலோசனை கோரிள்ளோம். என  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) தேசிய சுதந்திர முன்னணின் தலைவர் விமல் வீரவன்ச சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தேர்தல் இழுபறியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு அமைச்சரவை மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.

நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் நிதி விடுவிக்காமல் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, தேர்தலை நாங்கள் பிற்போடவில்லை, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரசசேவையாளர்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நகர சபைகள், பிரதேச சபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்  102 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அவர்களை தேர்தல் இடம்பெறாத நிலையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்ள முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அமைச்சரவை ஊடாக நிவாரண கொடுப்பனவு வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு  குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை கோரியுள்ளோம். ஆளும் தரப்பின் சார்பிலும் பெருமளவான அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளார்கள், ஆகவே இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை உள்ளது, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு இறுதியில்  அவர்களின் குடும்பத்தாரின் வாக்குகள் கூட கிடைக்காத நிலை தோற்றம் பெறும்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை பிறிதொரு தேர்தல் தொகுதியில்  பணிபுரியும் விசேட வழிமுறையை உருவாக்குங்கள், பொருளாதார பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு புத்தாண்டுக்கு முன்னர்  சிறந்த தீர்வினை வழங்குங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுத்தாக்கல் செய்த ஒட்டுமொத்த வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளமும் இல்லை,சேவையும் இல்லை ஆகவே மார்ச் மாதம் 09 ஆம் திகதி என்ற வரையறைக்குள் அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க  வேண்டும்;அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு  ஆரம்பக்கட்ட கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன சேவையில் ஈடுபடும் சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்ற சத்தியகடதாசி ஒன்றை பெற்றுக்கொள்வது குறித்து சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க 1987 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு 1992 ஆம் ஆண்டு வரை குறித்த தேர்தல் இடம்பெறவில்லை.

அதுவரையான காலப்பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது பிரச்சினையொன்றுமில்லை என்றார்.