சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம்.
எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது.
இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும்.
நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார்.
நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.