எரிபொருள் விலை குறைக்கப்படும்!

101 0

அமெரிக்க டொலர் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு, ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்படும்.

பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என  மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் , நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மக்களாணை இல்லாத ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என  எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு பொய்யாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு  அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பித்துச் சென்றவர்கள். தற்போது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சேறு பூசுவதை கண்டுக் கொள்ள போவதில்லை.

கனிய வளங்கள் தொடர்பான ஆய்வுகள் நீண்ட காலமாக நாட்டில் நடைபெறுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் ஒழுங்குவிதிகளை தயாரித்து நாங்கள் முன்வைத்துள்ளோம். இதன்மூலம் தேவையான முதலீட்டாளர்களை நாட்டுக்கொண்டு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். வளங்களை சும்மா பயன்படுத்தாது வைத்திருக்க முடியாது.

அதன்மூலம் ஏதாவது நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் குறித்த ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிய பின்னர் உலக முதலீட்டாளர்களுக்கு குறித்த இடங்களின் ஆய்வுகளை நடத்த முடியும்.

இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நாணயக் கடிதங்களை இனி திறக்க முடியும். இதன்படி குறைந்த விலையில் விநியோகங்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். நாங்கள் எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு மாதமும் அதனை செய்கின்றோம். இப்போது மசகு எண்ணெய் விலை குறைவடைகின்றது. ரூபா பலமடைகின்றது. இதன்படி ஏப்ரல் மாதமளவில் திருத்தத்தின் போது மக்களுக்கு அனுபவிக்கக் கூடிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் மின்சாரக் கட்டணத்திலும் நிவாரணங்கள் கிடைக்கும். ஜனவரியில் விலை மறுசீரமைப்பை செய்திருந்தால் ஜுன் மாதமளவில் நிவாரணத்தை வழங்கியிருக்க முடியும். எப்படியும் டிசம்பருக்குள் மின்சார கட்டணத்திலும் நிவாரணம் கிடைக்கக் கூடிய வேலைத்திட்டங்களை செய்ய முடியும்.பொருளாதார முன்னேற்றத்தின் பலனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

நட்டமடையும் அரச நிறுவனங்களான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை ஆகிய நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும்.அரச நிறுவனங்களின் நட்டத்தால்  ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,இந்த நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் தரப்பினர் தான் மறுசீரமைப்புக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தொழிற்சங்க போராட்டங்களுக்கு அச்சமடைய போவதில்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும், இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்ட துறைசார் நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் வாரகாலப்பகுதியில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும் என்றார்.