புலஸ்தினி நாட்டை விட்டு வெளியேற உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி விடுதலை

97 0

உயிர்த்த  ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை  இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில்  இருந்த  தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி   மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் நேற்று (20) திங்கட்கிழமை  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த பொலிஸ் தலைமை  பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் என்பவர்  புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான  தகவலைத் தெரிந்தும் அதனை மறைத்தமை தொடர்பிலும்  அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும் 13.07.2020ம் ஆண்டு  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் தடுப்புக்காவில் வைக்கப்பட்டு 08.04.2021ல் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

தான் செய்யாத குற்றத்திற்க்காக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றமையானது தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகக் கூறி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் 2021 ஜூன் மாதம் 29ம் திகதி இலங்கை உச்ச நீதிமன்றில் அவரது  சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய  ஏ. எல். ஆஸாதினூடாக அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 32 மாதங்களாக தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர்   திங்கட்கிழமை (20) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதபதி என். எம். எம். அப்துல்லாஹ்வினால்  பிணையில்  விடுவிக்கப்பட்டார்.

அரச சார்பில் தோன்றிய அரச சட்டத்தரணி  ஸக்கி இஸ்மாயில் குறிப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிராக தனது கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.இருந்த போதிலும் தலைமை  பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர்   சார்பில் ஆஜரான  சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷஹீட், சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத், சலாஹுதீன் சப்ரின் மற்றும் பாத்திமா பஸீலா ஆகியோர் செய்த சமர்ப்பணங்களை  ஆராய்ந்த நீதிபதி பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கரை பிணையில் விடுதலை செய்தார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டமானது ஒரு கொடூரமான சட்டமாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைகளில் அதீத அதிகாரத்தை வழங்கி சட்டத்திற்கு முரணான கைது, சட்டமுரணான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கு இடமளிக்கும் சட்டமாகவும் இருந்து வருகிறது. இதனை இல்லாதொழிக்க மனித உரிமை அமைப்புக்கள் மும்முரமாக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றன.

மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  விவகாரம் தொடர்பில்  கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை    எதிர்வரும் யூன்   மாதம் 07  திகதி வரை மறுவிசாரணைக்காக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் 20 இலட்சம் ரூபா 2 சரீரப்பிணை மற்றும் 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிற்கு செல்ல முடியாதவாறு தலைமை பொலிஸ் பரிசோதகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் பாராப்படுத்தமாறும் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடாது எனவும்  நீதிபதியினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வழக்கு கடந்த காலங்களில்  கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில், குறித்த  வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை  பிரதிவாதி  சார்பாக ஆஜரான   சட்டத்தரணிகள் குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் பிணை கோரிக்கைக்கான மன்றிற்கு    விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கமைய குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்ததுடன்  குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும் இவ்வாறு விசாரணைக்கு இவ்வழக்கு எடுக்கப்பட்ட பின்னர் அந்த  ஆவணங்களை முறையாக கல்முனை மேல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வழக்கு  மீளப்பெறப்பட்டு (கைவாங்கல்)  தொடர்ச்சியாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக  கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை  தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்  அம்பாறை பொலிஸ்  உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.