அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பசியைப் போக்க, காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாவுக்கு கவர்னர் டிம் வால்ஸ் ஒப்புதல் வழங்கினார். மசோதாவில் கையெழுத்திட்டதையடுத்து குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கவர்னரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து சட்டமானதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு மற்றும் மதிய உணவை வழங்குவது, மாணவர்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நாம் செய்யும் சிறந்த முதலீடுகளில் ஒன்று என கவர்னர் டிம் வால்ஸ் கூறினார். இந்த மசோதா மின்னசோட்டா மாநிலத்தை குழந்தைகள் சிறப்பாக வளர்வதற்கு சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.