சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்பவற்றிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறும். இவ் உதவிகளின் அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் பட்சத்தில் எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்பவற்றிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறும். இது சாதகமான சமிஞ்ஞை ஆகும். எவ்வாறிருப்பினும் மறுபுறம் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் போது கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
நாட்டில் பல்வேறு வழிமுறைகளிலும் டொலருக்கான கேள்வி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு கடன்கள் மீள செலுத்தப்படுவதில்லை. இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பாவனைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக இதற்கு முன்னர் எரிபொருள் கொள்வனவிற்கு பாரிய செலவு காணப்பட்டது. எனினும் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்சாலைதுறைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாகவும் டொலருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் மத்திய வங்கியின் நிதி கொள்வனவுடன் டொலரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய டொலரின் பெறுமதியை தொடர்ந்தும் 200 – 300 ரூபாவாகப் பேண முடியும் எனக் குறிப்பிட முடியாது. இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டாலோ அல்லது எரிபொருள் உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கப்பட்டாலோ டொலரின் பெறுமதி நிச்சயம் மீண்டும் உயர்வடையும். எவ்வாறிருப்பினும் இந்த நிலைமைகளின் அடிப்படையில் எரிபொருள் மற்றும் மின் கட்டணத்தை குறிப்பிட்டளவு குறைக்க முடியும் என்றார்.