சட்டவாக்க சபைக்கும், நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நிர்வாகத்துறை செயற்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்கும் செயற்பாட்டுக்கு சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கடுவலை பகுதியில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறாது. எந்தத் தேர்தலையும் நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.
தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என ஜனாதிபதி தீர்மானிப்பாராயின் சுயாதீன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு ,2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஊடாக மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பல தடைகளை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதை விடுத்து,தேர்தல் தொடர்பில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டவாக்கத்துக்கும்,நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைக்கும் தீர்மானத்துக்கு சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.