பொத்துவில், ஆத்திமுனை சர்வோதய புர கிராமத்துக்குள் நேற்றிரவு (19) உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த வீடு ஒன்றை முற்றாக சேதமாக்கியுள்ளது.
இதன்போது, வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிந்தவர்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியிவ் உயிர்தப்பியுள்ளனர்.
அண்மைக் காலமாக, பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட சர்வோதையபுரம் மற்றும் செங்காமம் ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதால், அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் காணப்படுகின்றனர்.
இந்த அச்சம் காரணமாக மாலை நேரங்களில், மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிவிட்டு, மீண்டும் காலையில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உட்புகும் காட்டு யானைக் கூட்டம் வீடுகள், வீட்டுத் தோட்டங்கள், சேனைப் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டடுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யானைத் தொல்லையை கட்டுப்படுத்த இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதேச செயலாளர், வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.