இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

268 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு எந்திரப் படகில் 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு எந்திரப் படகில் 4 மீனவர்களும் 2-ந் தேதியன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களின் படகுகளும் பிடிபட்டுள்ளன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பிடிக்கப்படுவதும் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லை என்பது முடிவு செய்யப்படாத ஒன்றாக உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த இந்த வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக ஆயிரத்து 650 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 27-ந்தேதியன்று உங்களிடம் நான் மனு கொடுத்தேன்.

தற்போது இலங்கையின் பிடியில் 48 தமிழக மீனவர்கள் உள்ளனர். மேலும், 122 மீன்பிடி படகுகளும் உள்ளன. ஏழை மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான படகுகளை இலங்கை அரசு தன்வசம் வைத்துள்ளது. இப்படியொரு நிலைப்பாட்டை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, அந்த படகுகள் மேலும் மேலும் சேதமடையாமல் அவற்றை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும்.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படாத நிலையை உருவாக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 48 மீனவர்களையும், பிடிக்கப்பட்டுள்ள 122 படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.