மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள் அவதி

161 0

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த உள் வீதியினூடாக சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  இலகுவாக பஸ் வண்டியில் செல்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்த பாதையாகவும் இது கருதப்படுகிறது.

 

இது தவிர இப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இலகுவாக நகர பாடசாலைகளுக்கு செல்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இப் பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் தமது கருமங்களை முடித்துக் கொள்வதற்காக அதிக பணம் செலவு செய்து நீண்ட பாதை ஊடாக பயணிக்க வேண்டி இருப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி வறிய மக்களின் பிரதான பாதையாக கருதப்படுகின்ற இப்பாதையின் இப் பாலத்தை திருத்தம் செய்து தருவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

இப்பாலம் இடிந்து நொறுங்கி சுமார் இரண்டு வருட காலத்தை கடந்து இருக்கின்ற போதிலும் இப்பிரதேசத்திற்கு வருகை தந்த அரசியல்வாதிகளோ அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் எவரும் இதனை திருத்த கவனம் செலுத்தவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தின் திருத்த வேலை பிரதேச மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக கருதப்படுவதனால் விரைவாக இந்தப் பாலத்தை திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.