நாட்டின் இருவேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரம்பனாவ – ஒருதொட்ட வீதியின் செரவத்த சந்தியில் லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியில் பயணித்த 11 பேரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்க்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் கோகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய மஹியாவ, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கோகலைபொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.