கடந்த சில மாதங்களாகவே மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பற்றாக்குறையால் பேருந்து சேவையை சரிவர வழங்கமுடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிமனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள சுமார் 500 ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் வகையில் மாற்றம் செய்யமாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது.
மேலும் அவர்கள் செய்து வந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்க முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாககடந்த ஆண்டு வெளியான டெண்டருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், டெண்டர் முடிவு அறிவிக்கப்படவில்லை.
அண்மையில் டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தேர்வான தனியார் நிறுவனம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டு, ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மீண்டும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பணி கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த பணிமனை ஓட்டுநர் நியமனத்தின் தற்போதைய நிலை குறித்த விவரம் கோரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மனு அனுப்பியிருந்தார். அம்மனுவுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் முதல்வரின் தனிப்பிரிவு விளக்கம் கேட்டது.
அதற்கு அனுப்பப்பட்ட பதிலில், “பணிமனை ஓட்டுநர் பணிக்குஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பயன்படுத்துவதற்கான பணிகள் செயலாக்கத்தில் உள்ளன”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநரை நியமிக்கும் முடிவை மாநகர போக்குவரத்துக் கழகம் கைவிடவில்லை என்பது தெளிவாகிறது.