சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் உள்ளடக்கங்களை அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியம் எமது அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் உள்ளடக்கங்களை அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றியவுடனேயே அதனை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார். இதில் எவ்வித இரகசியமும் இல்லை.
நாடு என்ற ரீதியில் அனைவரும் இது குறித்து அறிய வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கும், பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் ஏனைய தரப்பினருக்கும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும்.
அதற்கமைய இதற்கான மாற்றுத் தீர்வுகள் அவர்களிடம் காணப்பட்டால், அதனை முன்வைப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியானது 8 கட்டங்களாக எமக்கு கிடைக்கப் பெறவுள்ளது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கமைய நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்து அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்படும் என்றார்.