ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்கும் அரசு மக்களை பற்றி சிந்திக்கவில்லை – புத்தூர் போராட்டத்தில் நிரோஷ்

131 0

ழல் அரசியல்வாதிகளை பாதுகாத்துக்கொண்டு மக்களின் மீது வரிச்சுமையினை ஏற்றி, அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பப் போகிறது என கூறுவது கனவிலும் நடைபெறாத ஒன்று என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். புத்தூரில் உள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக நேற்றிரவு (17) இடம்பெற்ற அரசுக்கு எதிரான தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால், முதலில் இனவாதத்தை துடைத்தெரிந்து மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் இனவாதம் இன்றும் அரச கொள்கையாக உள்ளது. ஊழல்கள் புரிந்த அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பாளிகள் வரிக்கொள்கை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சுரண்டப்படுகின்றனர். மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

நடைபெறவேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அரசாங்கம் தனக்கு சாதகமற்றது என்பதை உணர்ந்து தடைபோட்டுள்ளது. மக்களின் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாழ். புத்தூரில் உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தினை நடத்துகின்றனர்.

இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்த உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்களான செந்தில்வேலர் மற்றும் கதிர்காமநாதன் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இப்போராட்டம் என்பது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சார்ந்த போராட்டமாகும்.

இதில் சகல தரப்புக்களும் இணைய வேண்டும். இப்போராட்டங்களை அரசினால் அடக்கி ஒடுக்கிவிட முடியாது.

நாடளாவிய ரீதியில் முற்போக்கு சிந்தனையுடன் போராடும் தரப்புக்கள் எமது தமிழ் மக்களின் அரசியல் விடுதலை பற்றி வெகுவாக சிந்தித்து இனவாதத்தினை துடைத்தெரிந்து ஒட்டுமொத்த விடுதலையினையும் வென்றெடுக்க கடமைப்பட்டுள்ளனர்.

அதிகரித்த உணவுப்பொருள் விலை உயர்வினால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் ஜனாதிபதி தனது இருப்புத் தொடர்பில் சிந்திப்பதை விடுத்து, மக்களின் பிரச்சினையை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.