எமது கோரிக்கைகு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தினை இடைநிறுத்தப்போவதில்லையென கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி.தில்லைநாயகம் சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிலர் ஊடகங்கள் ஊடாக தமது போராட்டம் கைவிடப்பட்டதாக பொய்யான கருத்துகளை முன்வைத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
‘எமது நாட்டில் மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமைக்கு எதிராக பல்வேறுபட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம். நாங்கள் சக தொழிற்சங்கங்களுடன் இணைந்து அடையாள வேலை நிறுத்தத்தினை செய்திருந்தோம்.
கடந்த 09ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்த போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம். எமது போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பாக ஒன்றிணைந்த செயற்பாட்டினை முன்னெடுத்தோம்.
இதற்கான தலைமைத்துவத்தினை அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் ஏற்றது. அதனடிப்படையில் நாங்கள் அதனை முன்னின்று தலைமைதாங்கி நடாத்துகின்றோம்.
கடந்த 15-03-2023 அன்று 41தொழிற்சங்கங்கள் இணைந்து நாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதில் நாங்கள் வெற்றியும் கண்டுள்ளோம்.
இது தொடர்பில் பிழையான கருத்துகள் பரிமாறப்பட்டுவருகின்றன.நேற்றுடன் நாங்கள் போராட்டங்களை நிறுத்துவதாக அக்கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
நேற்று(15) முன்தினம் மட்டும் ஒரு சில தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தமாக செய்திருந்தன. ஆனால் எங்களுடைய எமது கோரிக்கை இன்றும் நிறைவேற்றப்படவில்லை.
எமது போராட்டத்தினை நிறுத்துவதனால் எமது கோரிக்கைக்கு ஒரு தீர்வு கிட்டியிருக்க வேண்டும். அல்லது தீர்வுக்கான உத்தரவாதமாவது தந்திருக்க வேண்டும். எந்த விதமான செயற்பாடும் இல்லாத நிலையில் எமது போராட்டங்களை கைவிட்டுள்ளோம் என்பது முற்றிலும் பொய்யான செய்தி.