மியான்மர் நாட்டில் கடந்த 3 மாதங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலின் போது சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் சீன எல்லையை ஒட்டிய ஷான் மாகானத்தில் 1980-ம் ஆண்டுகளில் இருந்து சிறு சிறு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக மியான்மர் ராணுவம் கடந்த சில ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்து வருகின்றது.
ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக அந்நாட்டின் தலைவர் ஆங்-சாங்-சூகி முயற்சி செய்தார். ஆனால், இப்பேச்சுவார்த்தை எடுபடாமல் போனது. மேலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவத்தினர் பலியான நிகழ்வும் நடந்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 160 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் சுமார் 20000 பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கிளர்ச்சிக் குழுக்கள் மீது வான்வெளித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக அண்டை நாடுகளின் உதவியை மியான்மர் அரசு கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.