2 நாள் பயணமான ஓமன் சென்றுள்ள இந்திய கடற்படை பிரதிநிதிகள் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா – ஓமன் இடையேயான கடற்படை பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த வழிவகைகளை ஆராய்ந்து ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கிடையே ஓமனில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஓமன் கடற்படை தளபதி மற்றும் பிரதிநிதிகளுடன் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, இந்திய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா-ஓமன் இடையேயான இரண்டாவது கூட்டுப்பயிற்சி 6-ஆம் தொடங்க உள்ள நிலையில், ஓமன் பாதுகாப்பு அமைச்சர் பதர் அல் புசய்தியின் அழைப்பை ஏற்று, ஓமன் சென்ற இந்திய கடற்படை தளபதி, பதர் அல் புசய்தி மற்றும் ஒமன் ராயல் கடற்படை தளபதி அட்மிரல் அப்துல்லா பின் காமிஸ் அல் ரெய்சியை சந்தித்து பேசினார்.
இரு நாடுகளுக்கிடையேயான கடற்படை பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமன் ராயல் விமானப்படை தளபதி அல் ஒபாய்தனியுடனும் இந்திய கடற்படை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 2 நாள் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்திய பிரதிநிதிகள் சுல்தான் பின் காபூஸ் நேவல் அகாடமியையும் பார்வையிடுகின்றனர்.
பயணத்தின் முதற்கட்டமாக இந்திய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தியா-ஓமன் இடையே 2-வது ராணுவ கூட்டுப்பயிற்சி இமாச்சல பிரதேசத்தில் மார்ச் 6-ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை (14 நாட்கள்) நடைபெறவுள்ளது. ‘அல் நாகா-2’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் இரு நாடுகளை சேர்ந்த 60 படைகள் பங்கு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.