உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்ய படை இன்று தீவிர வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், பல நாட்களுக்குப் பிறகு தீவிர தாக்குதலில் ரஷ்யா மீண்டும் இறங்கியுள்ளது. வியாழக்கிழமை காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரஷ்ய தீவிரவாதிகள் இன்று காலை மக்களின் பொதுப் போக்குவரத்து வாகனங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு பேர் பலியாகினர். இதில் 2 பேர் கீவ் நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் கெர்சன் நகரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனிபோரை சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களை மட்டுமே பயமுறுத்த முடியும். அவர்களால் செய்யக்கூடியது அவ்வளவுதான். ஆனால், அது அவர்களுக்கு உதவாது. அவர்கள் செய்த அனைத்திற்கும் பொறுப்பை ஏற்றே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.