குறைந்தபட்ச திருமண வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டமை இஸ்லாத்துக்கு முரணானது அல்ல

102 0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டமை இஸ்லாத்துக்கு முரணானது அல்ல என அந்நாட்டின் மத்திய ஷரீஆ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிந்து மாகாணத்தின் 2013 ஆம் ஆண்டின் சிறுவர் திருமண தடுப்புச் சட்டத்தின்படி ஆண்கள், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும்.

இச்சட்டம் இஸ்லாத்துக்கு முரணானது எனக் கூறி அலி அஸ்ஹர் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை மதம் மாற்றிய பின் திருமணம் செய்தவர் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அலி அஸ்ஹரின் வழக்கை விசாரித்த பாகிஸ்தானின் சமஷ்டி ஷரீஆ நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் கலாநிதி சயீத் முஹம்மத் அன்வர், நீதியரசர் காதிம் ஹுசைன் ஆகியோர் கடந்த  திங்கட்கிழமை தீர்ப்பை அறிவித்தனர்.

சிந்து மாகாணத்தின் 2013 ஆம்  ஆண்டின்  சிறுவர் திருமண தடுப்புச் சட்டமானது இஸ்லாத்துக்கோ, பாகிஸ்தானின் அரசியலமைப்புக்கோ முரணானது அல்ல என நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.

குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிப்பதானது சிறுமிகள், குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியை பூர்த்தி செய்வதற்கு நியாயமான காலஅவகாசத்தை வழங்குகிறது. பொதுவாக இது ஒருவரின் உளவியல் முதிர்ச்சி அபிவிருத்திக்கு உதவுகிறது’ எனவும் நீதியரசர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.