பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவின் ஊடாக சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பி , உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை கேள்விக்குள்ளாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நீதித்துறை கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் இராணுவத்தினரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு என்ன அதிகாரம் காணப்படுகிறது? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நீண்ட காலத்தின் பின்னர் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறாமல் தடுத்துள்ளார்.
இதற்காக நீதிமன்றத்தை நாடியதால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கமைய , தேர்தல் ஆணைக்குழு புதிய திகதியொன்றை வழங்கியுள்ளது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவின் ஊடாக பாராளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பி , உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை கேள்விக்குள்ளாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
பிரேம்நாத் தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சிறப்புரிமை கேள்வியை , சிறப்புரிமைக்குழு அங்கீகரித்தால் உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களை பாராளுமன்றத்திற்கு அழைக்க வேண்டியேற்படும். இது தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நீதித்துறை கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதலாகும்.
நீதிமன்றம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் தலையிடவில்லை. பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நிதியானது , நிறைவேற்றுத்துறையால் முடக்கப்பட்டுள்ளமை தவறு என்பதையே நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பாராளுமன்றத்திடம் காணப்படும் நிதி தொடர்பான அதிகாரம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தபால் மூல வாக்கெடுப்பிற்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனையும் ஏதேனுமொரு வகையில் தவிர்ப்பதற்கு ஜனாதிபதியால் சதித்திட்டம் தீட்டப்படும். இரும்பு கம்பி கொண்ட இராணுவத்தினரைக் கொண்டு ஜனாதிபதி எம்மை முடக்க முற்படும் போது , நாம் மக்கள் பலத்தினால் அதனை முறியடிப்போம் என்றார்.