நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் அரச அதிகாரிகள் சிறைசெல்ல நேரிடும்

95 0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலையை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய செயற்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து   ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில்  சிறை செல்ல  நேரிடும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளர்கும் வகையில்  மின்சார கட்டண அதிகரிக்கப்பட்டு, வரி அதிகரிக்கப்பட்டுள்ளது,  இதனால் கிடைக்கப் பெற்ற வருமானம் எங்கே,இப்போது டொலர் இருந்தாலும் ரூபா இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

அரசாங்கம்  இனி புதிய நாடகமொன்றை அரங்கேற்றும். பொருட்களின் விலைகளை குறைப்பர். இதனால் மக்களுக்கு பொருட்களில் சிறிய சேமிப்பு இருந்தாலும் மின்சாரக் கட்டணங்கள் உள்ளிட்ட மற்றையவற்றில் இழப்பே இருக்கும். இப்போது கடனை வாங்கிக்கொண்டு நாங்கள் நிதியில் பலமாக இருக்கின்றோம் என்று கூறும் நிலைமையே உள்ளது.

இன்று மக்கள் மருந்து இன்றி அவதிப்படுகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் மருந்துக்கு உதவி செய்தனவே. எங்கே அந்த மருந்துகள். நீங்கள் வேலைக்காரர்கள் என்றால் மருந்தை கொண்டு வாருங்கள்.ரணில் வழங்கும் உருண்டைகளை சாப்பிட வேண்டாம். அரச ஊழியர்களுக்கும் இதனை கூறுகின்றோம். சிறப்புரிமைகள் இல்லாமல் போன பின்னர் சிறிசேனவுக்கு என்ன நடந்தது. அவருக்கு இப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நினைவில் கொள்ளுங்கள்.