இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவைத் தக்கவைக்க முடியாது என்பதால், அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மார்ச் 27 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்பிறகு, மனுவை ஏப்ரல் 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அமர்வது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என மனுதாரர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.