நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் திறைசேரி செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

173 0

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், திறைசேரி செயலாளர் அதனை உதாசீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.

இதனை பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் மூலம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய செவ்வாய்க்கிழமை (7) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய வெகுவிரைவில் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்குமாறு நாம் ஆணைக்குழுவிடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம்.

திறைசேரி செயலாளர்உள்ளிட்ட தரப்பினருடனான கலந்துரையாடல்களின் பின்னர் விரைவில் தினத்தை அறிவிப்பதாக ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் அவர்கள் கலந்துரையாடலுக்கு பிரிதொரு தினத்தைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எது எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல் தேர்தல் ஆணைக்குழு விரைவில் தினத்தை அறிவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு முன்னிற்கும் சில குழுக்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை நாம் கண்டிக்கின்றோம் என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சு தேர்தலுக்கான நிதியை கட்டாயம் வழங்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான கடமை விரைவில் தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதாகும். இம்மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்கடினம் எனில் , ஏப்ரல் முதல் வாரத்திலேனும்  தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினோம்.

தற்போது பண வீக்கம் குறைவடைந்துள்ளதாகவும் , நிதி கையிருப்பில் உள்ளதாகவும், ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது.

அவ்வாறிருக்கையில் ஏன் தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது? தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்குபற்ற முடியாது என்று திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளமையிலிருந்தே அரசாங்கத்தின் சூழ்ச்சி வெளிப்படுகிறது.

நிதி அமைச்சின் செயலாளர் அவரின் கடமைகளை உதாசீனப்படுத்தினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் தயார் என்பதையும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட்டோம்.

தேர்தலைக் காலம் தாழ்த்த ஒத்துழைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை , ஆர்ப்பாட்டம் மற்றும் சர்வதேச தலையீடுகளைக் கோரல் என்பவற்றையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில்,

திறைசேரி செயலாளருக்கு அழைப்பு விடுத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதுவுமில்லை. தற்போது அவரிடம் கேட்பதற்கு எதுவுமில்லை. மாறாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய செயற்படுமாறு கூறுவதற்கே உள்ளது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு காணப்பட்ட தடையை நீதிமன்றத்தை நாடி அதன் ஊடாக நாம் நிவர்த்தி செய்துள்ளோம். எனவே தற்போது தேர்தலுக்கான தினத்தை அறிவிக்குமாறு ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இனியும் தேர்தலுக்கான நிதியை விடுவிக்காவிட்டால் திறைசேரி செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்ததாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கையில்,

கடந்த 20 நாட்களாக தடைப்பட்ட நடவடிக்கைகளை தற்போது மீண்டும் ஆரம்பித்தால் எதிர்வரும் வாரங்களை தேர்தலை நடத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. பெப்ரவரி முதல் வாரத்தில் மாத்திரம் 158 பில்லியன் அரசாங்கம் கடன் பெற்றுள்ளது.

எனவே அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே திறைசேரி செயலாளருக்கு இரு தெரிவுகள் உள்ளன. ஒன்று அவர் பதவி விலக வேண்டும். அவ்வாறில்லை எனில் தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும் என்றார்.